டெல்லி:அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. சீக்கியர்களுக்கு என தனி நாடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலிஸ்தான் அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதில் ஒரு பிரிவான வாரீஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங். பயங்கரவாத நடவடிக்கைகளில் அமிரித் பால் சிங் ஈடுபடுவதாக பஞ்சாப் போலீசார் அவரை கைது செய்ய முற்பட்டனர். போலீசார் கைது நடவடிக்கையில் இருந்து அம்ரித் பால் சிங் தப்பி தலைமறைவானதாக கூறப்படுகிறது.
அதேநேரம் போலீசார் தன் மகனை கைது செய்து விட்டு நாடகமாடுவதாக அம்ரித் பால் சிங்கின் தந்தை பஞ்சாப் உயர் நிதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்து உள்ளார். இதனிடையே அம்ரித் பால் சிங் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளி நாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் காலிஸ்தான் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் வெளிநாடுகளில் அந்த அமைப்புக்கு எந்த தடையும் இல்லை எனக் கூறப்படும் நிலையில், அதன் காரணமாக அம்ரித் பால் சிங் ஆதரவாளர்கள் தொடர் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் அமைப்பு ஆதரவாளர்கள், தூதரகம் முன் இருந்த தேசியக் கொடியை அகற்றினர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இந்த சம்பவத்திற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ராட்சத தேசியக் கொடி கட்டடத்தின் மேல் தொங்கவிடப்பட்டது.