டெல்லி: அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலை ஹமாஸ் அமைப்பினர் தாக்கினர். மேலும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் நாட்டிலிருந்து பலரைப் பிணையக் கைதிகளாகச் சிறை பிடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் தொடங்கியது. இஸ்ரேல் காஸா மீது தங்களது தாக்குதலைத் தொடங்கினர்.
இந்த போரின் காரணமாக, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பல மக்கள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக பாலஸ்தீனத்தில் வாழும் குழந்தைகள் பெண்கள் எனப் பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 25 நாட்களுக்கு மேல் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. இந்தியா பயங்கரவாதத்தை ஒரு ஆதரிக்காது எனவும், பாலஸ்தீனத்தின் உரிமைகள் மற்றும் இறையாண்மையைக் குறித்தும் தெளிவான நிலைப்பாடு கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இத்தாலி நாட்டின் பிரதிநிதியுடன் சேர்ந்து ரோம் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறும்போது, "இந்தியா பயங்கரவாதம் தொடர்பாகத் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அதே போல் பாலஸ்தீனத்தின் உரிமைகள் மற்றும் இறையாண்மையும் அவசியம். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என இரண்டு நாடுகள் மீது சமமான தெளிவான நிலைப்பாடு உள்ளது. மேலும், இத்தாலி அரசைப் போல இந்தியாவும் காசாவிற்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவிகள் வழங்கி வருகிறது." எனத் தெரிவித்தார்.