டெல்லி : தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1976ஆம் ஆண்டு இலங்கையில் வடகிழக்கில் தமிழீழம் என்ற பெயரில் தமிழருக்கான தாயகத்தை உருவாக்கும் அமைப்பாக தொடங்கப்பட்ட விடுதலை புலிகள் இயக்கம் 2009ஆம் ஆண்டு வரை இயங்கிக் கொண்டு இருந்தது. இலங்கையில் தமிழர் படுகொலைக்கு எதிராக நடந்த போரை தொடர்ந்து விடுதலை புலிகள் இயக்கும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் விடுதலை புலிகள் இயக்கத்தை ஒருங்கிணைக்கும் பணிகள் தொடங்கி உள்ளதாக இலங்கை அரசுக்கு, தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. எச்சரிக்கை விடுத்து உள்ளது. விடுதலை புலிகள் இயக்கம் தொடர்புடைய சிலர், கடத்தல் கும்பல்களுடன் இணைந்து போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு பணம் திரட்டி வருவதாக கூறப்படுகிறது.
இலங்கை மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதலை புலிகள் இயக்கத்தின் தொடர்புடையவர்கள் பங்கரவாத செயல்களில் ஈடுபட்டு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இலங்கை அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளதாக இந்திய பாதுகாப்பு துறையை சேர்ந்த ஒருவர் ஈ.டிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் லிங்கம் என்கிற ஆதி லிங்கம் என்பவரை கைது செய்ததாகவும், அவர் இலங்கையிலும், இந்தியாவிலும் விடுதலைப் புலிகளை இயக்கத்தை மீண்டும் ஒருங்கிணைக்கும் விதமாக நிதி திரட்ட போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட செய்ல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போதை பொருள் மற்றும் ஆயுத கடத்தல் வழக்கின் முக்கிய நபரான குணசேகரன் என்கிற குணாவுடன் ஆதி லிங்கத்திற்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அவர் பூக்குட்டி கண்ணா என்ற புஷ்பராஜ் மற்றும் பாகிஸ்தான் ஆயுத சப்ளையார் ஹாஜி சலீம் ஆகியோருடன் சேர்ந்து சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தாகவும் கூறப்பட்டு உள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒருங்கிணைக்க திருச்சியில் முகாம், போதைப்பொருள் மற்றும் தங்கம் கடத்தல் மூலம் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டியதாக உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக பாதுகாப்பு அமைப்புகள் தரப்பில் தகவல் கூறப்பட்டு உள்ளது.
மேலும், இந்தியா - இலங்கை எல்லையில் கடல் வழியாக எல்லை தாண்டிய பயங்கரவாதம், சட்டவிரோத குடியேற்றம், கள்ள நோட்டு கடத்தல், போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் போன்றவற்றை நடத்தி வருவதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க :முன்னாள் கடற்படை வீரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு! கத்தார் நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு!