சென்னை:கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு உள்ளவராக கூறப்படும் தொழிலதிபர் பாரிஸ் அபூபக்கர் தொடர்பான நாடு முழுவதும் உள்ள இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பிரபல தொழிலதிபரான பாரிஸ் அபூபக்கர் ரியல் எஸ்டேட் உள்பட தொழிகளில் ஈடுபட்டு வருகிறார். முக்கியமாக கேரளா, சென்னை, பெங்களூர், மும்பை என நாடு முழுவதும் நிறுவனங்கள் நடத்தி வரும் இவர் உள்நாட்டு மட்டுமல்லாது வெளி நாடுகளிலும் பாரிஸ் அபூபக்கர் என்ற பெயரில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் பாரி அபூபக்கர் தொடர்புபடுத்தி பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாரீஸ் அபூபக்கர் தொடர்புடைய நாடு முழுவதும் உள்ள இடங்களில் நேற்று (மார்ச். 20) முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்தந்த மாநிலங்களில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் பாரீஸ் அபூபக்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது பாரிஸ் அபூபக்கருக்கு உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் 92 கம்பெனிகள் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை நீலாங்கரை சன் ரைஸ் அவன்யூவில் உள்ள பாரீஸ் அபூபக்கர் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல் கிண்டியில் உள்ள சோபா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திலும் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பினாமி பெயர்களில் நிலங்களை வாங்கியது, கணக்கில் வராத கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பது, வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு பண பரிவர்த்தனை மேற்கொண்டது, பணி பரிமாற்றத்திற்கு உரிய வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக தொழிலதிபர் பாரிஸ் அபூபக்கருக்கு கொச்சின் வருமான வரித் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர் சோதனையில் பாரிஸ் அபூபக்கர் தொடர்பான இடங்களில் பல்வேறு முக்கிய பத்திரங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் நிலம் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், பினாமி சொத்துக்களாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மூலம் எவ்வளானை நிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வருமான வரி சோதனையின் மூலம் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் கேரள அரசியல் பிரமுகர்கள் பலர் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொழிலதிபர் பாரிஸ் அபூபக்கர் தொடர்பான இடங்களில் மட்டுமல்லாது முக்கிய நிலத்தரகர்கள் சில அரசு அதிகாரிகள் வீட்டிலும் சோதனை நடத்தி வருவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இதையும் படிங்க:'எண்ணும் எழுத்தும்' கொண்டாடப்படும் திட்டமல்ல - தமிழக ஆசிரியர் கூட்டணி பகீர் குற்றச்சாட்டு!