புனே:டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 28) திறந்து வைத்தார். விழாவில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், நீதிபதிகள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், தமிழ்நாட்டை சேர்ந்த மடாதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, நாடாளுமன்ற கட்டடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோலை, மக்களவை சபாநாயகர் இருப்பிடம் அருகே பிரதமர் நரேந்திர மோடி நிறுவினார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில், "நாடாளுமன்ற திறப்பு விழாவை இன்று காலை நான் பார்த்தேன். நான் அங்கே செல்லாதது குறித்து மகிழ்ச்சி அடைந்தேன். அங்கே நடந்தவையை பார்த்து மிகவும் எரிச்சல் ஏற்பட்டது. நாம் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்கிறோமா? இந்த நிகழ்ச்சி குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் தானா? என்று எண்ணத் தோன்றியது.
நவீன அறிவியலின் அடிப்படையில் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியதற்கு, நேர்மாறாக புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு நிகழ்ச்சி நடந்தது. திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவரை அழைப்பது அரசின் கடமை. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் அங்கே இல்லை. அந்த நிகழ்ச்சி முழுவதும், குறிப்பிட்ட மக்களுக்கானதாகவே இருந்தது.