2024 புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் கடற்கரையில் குவியும் சுற்றுலா பயணிகள் புதுச்சேரி: 2024 புத்தாண்டையொட்டி, புதுச்சேரி மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கடற்கரை, கோயில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இன்று (டிச.31) நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட உள்ள நிலையில், புதுச்சேரிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகைதர தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக, ஒயிட் டவுன் பகுதியில் உள்ள கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த செஞ்சி சாலைக்கு கிழக்கே உள்ள டுமாஸ் வீதி, விக்டர் சிமோனல் வீதி, ரோமன் ரோலண்டு வீதி, சுயிப்ரேன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் இன்று 2 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுதிகள் முன்பதிவு: புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதுச்சேரியில், விடுதிகளில் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நட்சத்திர விடுதி முதல் சாதாரண விடுதி வரையிலான அனைத்து விடுதிகளிலும், ஆன்லைன் மூலமாக வெளிமாநிலத்தினர் முன்பதிவு செய்துள்ளனர். மக்களின் முன்பதிவு காரணமாக, சில விடுதிகளில் கட்டணங்கள் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும் புத்தாண்டை முன்னிட்டு, நட்சத்திரம் விடுதிகள், ரிசார்ட்கள், ரெஸ்டோ பார்கள் மற்றும் பாரடைஸ் பீச் உள்ளிட்டவைகளில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் கட்டணம், ஒரு நபருக்கு தலா ரூ.1000 முதல் ரூ.8000 வரை உள்ளது. ஒயிட் டவுன் பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் கடற்கரை சாலை தலைவர்களின் சிலைகளுக்கு மின்விளக்குகளால் அலங்காரிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து தடை: புத்தாண்டை முன்னிட்டு, இன்று புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு நிகழ்ச்சிக்கு சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மதியம் 2 மணி முதல் ஒயிட் டவுன் பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு பாஸ்: மருத்துவமனைக்கு செல்பவர்கள், குடியிருப்பு வாசிகள், விடுதிகளின் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் மூன்று வகையான பாஸ் வழங்கப்பட்டு அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒயிட் டவுன் பகுதியில் வசிப்பவர்களுக்கும் அங்குள்ள தேவாலயங்களுக்கு செல்பவர்களுக்கும் சிறப்பு பாஸ் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கை: கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 6 மணி முதல் பொதுமக்கள் வருகை அதிகரித்து வரும். இதனால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடற்கரை சாலையில் 150-க்கும் மேற்பட்ட தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு ஒரு மணிக்கு மேல் கடற்கரையில் புத்தாண்டுகளை கொண்டாடக்கூடாது என்றும், சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் புத்தாண்டுகளை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கொண்டாட வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க:தன்னிச்சையாக செயல்படும் துணை வேந்தர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் - வேல்முருகன் வலியுறுத்தல்!