கஸ்கஞ்ச் :உத்தரப்பிரதேசத்தில் பிரபல ரவுடியும் அரசியல்வாதியுமான அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரப் சுட்டுக்கொல்லப்பட்டனர். மருத்துவப் பரிசோதனைக்காக அடிக் அகமது மற்றும் அஸ்ரப் அழைத்துச் சென்றபோது, போலீசார் மற்றும் பத்திரிகையாளர் முன்னிலையில் இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது.
பத்திரிகையாளர் போல் வேடமிட்டு அடிக் அகமது மற்றும் அஸ்ரப் ஆகியோரை நெருங்கிய 3 பேர் திடீரென இந்த துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தினர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் லவ்லேஷ் திவாரி, சன்னி சிங் மற்றும் அருண் மவுரியா ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அருண் மவுரியாவின் குடும்பத்தினர் உயிருக்கு பயந்து யாருக்கும் தெரியாமல் கிராமத்தை விட்டு வெளியேறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கஸ்கஞ்ச் மாவட்டம், சோரன் அடுத்த கதர்வாதி கிராமத்தில் அருண் மவுரியாவின் குடும்பத்தினர் வசித்து வந்து உள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து அருண் மவுரியாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை வீட்டில் காணவில்லை எனக் கூறப்படுகிறது. அருண் மவுரியாவின் குடும்பத்தினர் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இரவோடு இரவாக கிராமத்தை விட்டு வெளியேறியதாக அக்கம்பக்கத்து மக்கள் தெரிவித்து உள்ளனர்.
பாதுகாப்புக் கருதி அருண் மவுரியா வீட்டின் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்த நிலையில், குடும்பத்தினர் கிராமத்தை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டின் கதவு திறந்த நிலையில் காணப்படும் நிலையில் சாக்குப் பையில் உருளைக்கிழங்குகள் மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கிடப்பதாக கூறப்படுகிறது.
அருண் மவுரியாவின் தந்தை தீபக் சிற்றுண்டி வியாபாரம் செய்து வருவதாகவும், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின் வீட்டை விட்டு தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் அருண் மவுரியாவின் தந்தை அரியானா மாநிலம், பானிபட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்குச் சென்று இருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
பானிபட் பகுதியைச் சேர்ந்த தீபக்கிற்கு அங்கு சொந்த வீடு இருப்பதாகவும்; அதில் அருண் மவுரியாவின் தாத்தா வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பானிபட் கிராமத்தில் தான் அருண் மவுரியா பிறந்த நிலையில், பள்ளிப் படிப்பை துறந்த அவர் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டதால், அவரது தந்தை தீபக், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கதர்வாதி கிராமத்திற்கு குடியேறியதாக கூறப்படுகிறது.
பானிபட்டை விட்டு வெளியேற மனமில்லாமல் அருண் மவுரியா அங்கே வசித்து வந்ததாகவும், இந்த நிலையில் தான் ரவுடி அடிக் அகமது கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :அலபாமா துப்பாக்கிச் சூடு - கால்பந்து வீரர் உள்பட 4 பேர் பலி - 28 பேர் படுகாயம்!