டெல்லி :எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் 4வது கட்ட ஆலோசனைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ம்மதா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்பது, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்திய கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கேவை தேர்ந்தெடுக்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் இதை ஏற்க மறுத்த மல்லிகார்ஜூன கார்கே தேர்தலில் வெற்றி பெறுவது முதல் பணியாக இருக்க வேண்டும் என்றும் அதன்பின் தலைமை குறித்து அலோசிக்கலாம் என்றும் தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு கிட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி வந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்கு பின்னர் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.