நாட்டின் 15ஆவது குடியரசுத்தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்றார். இன்று நாடெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் "திரெளபதி முர்மு" என்ற பெயர், அவரது இயற்பெயர் இல்லை என முர்மு கூறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒடியா மொழி சேனல் ஒன்றிற்குப் பேட்டியளித்த அவர், தன்னைப் பற்றிய பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில்,"திரெளபதி எனது உண்மையான பெயர் இல்லை. சந்தாலி இனத்தில் பெரும்பாலும் குடும்பத்தில் உள்ள மூதாதையர்களின் பெயர்களைத்தான் குழந்தைகளுக்கு வைப்பார்கள். அதனால், அந்தப்பெயர்களுக்கு அழிவே இல்லை. அவ்வாறு எனக்கு குடும்பத்தினர் வைத்த பெயர் புதி.
திரெளபதி என்ற பெயர் எனது ஆசிரியர் வைத்தது. எனது ஆசிரியருக்கு புதி என்ற பெயர் பிடிக்கவில்லை என, மகாபாரதத்தில் வரும் கதாப்பாத்திரமான திரெளபதியின் பெயரை எனக்கு வைத்தார். வங்கி ஊழியரை திருமணம் செய்து கொண்ட பிறகு, திரெளபதி முர்மு என்று பெயர் மாறிவிட்டது.
ஆண்கள் ஆதிக்கம் அதிகரித்துக்காணப்படும் அரசியலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். அரசியல் கட்சியினர் பெண் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்த வேண்டும். பெண்கள் தரமான அரசியலில் கவனம் செலுத்த வேண்டும். தங்கள் அதிகாரத்தைப்பெற பெண்கள் குரல் எழுப்ப வேண்டும். மக்கள் பிரச்னைகளை சரியான தளத்தில் எடுத்துக்கூற வேண்டும்" என்று கூறியிருந்தார்.