பெங்களூரு:மக்களின் வாழ்வை மகிழ்ச்சியாகவும், வசதியாகவும் மாற்றுவதே அறிவியலின் உச்சக்கட்ட இலக்கு என்றும், இளம் தலைமுறையினரிடம் அறிவியல் சிந்தனைகளை வளர்ப்பது மிகவும் முக்கியமானது எனவும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் அமைந்துள்ள இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், "வானியல் நமது சமூகத்திற்கு பல வழிகளில் பலனளித்துள்ளது. மக்களின் வாழ்வை வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றுவேத அறிவியலின் உச்சக்கட்ட இலக்கு. வானியலிலிருந்து தொழில்துறை, விண்வெளி, ஆற்றல் துறை என பரந்த அளவில் தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
வானியல் குறித்த ஆராய்ச்சியின் மூலமே இன்று நாம் ஜிபிஎஸ், எக்ஸ்ரே மெஷின், சூப்பர் கம்ப்யூட்டர்ஸ், செயற்கைக்கோள் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை இன்று உபயோகித்து வருகிறோம். அதுமட்டுமல்லாது பூமியின் வளிமண்டலம் குறித்து வானியல் மூலமே நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. காலநிலை மாற்றம் குறித்த முக்கிய புரிதலையும், அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் வானியல் ஆராய்ச்சிகள் நமக்கு கற்பித்துள்ளன.
அதுமட்டுமல்லாது வானியல் சார்ந்த ஆராய்ச்சி திட்டங்கள் அனைத்து மக்களையும், நாடுகளையும் ஒன்றிணைக்கின்றன. விண்ணுக்கு செலுத்தும் வாகன ஊர்தியில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய வசதிகள், எதிர் காலத்தில் விண்வெளி துறை மேம்பாட்டிற்கு உதவியாக இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க:ஸ்கோடா நிறுவன கார் விலை ஜனவரி முதல் உயர்வு