வாஷிங்டன் :2023 ஆம் ஆண்டு உலக பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், உலக பொருளாதார வளர்ச்சியில் பாதியை சீனா மற்றும் இந்தியா கொண்டு இருக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்து உள்ளார்.
கரோனா பெருந்தொற்று மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் கடந்த ஆண்டு உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சுணக்கம் மற்றும் மந்த நிலையில், நடப்பாண்டிலும் தொடரும் என கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்தார். பொருளாதார மந்த நிலை மற்றும் ஆமை வேக பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டிலும் நீடிக்கும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி 3 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படும் என்றும அவர் கூறினார்.
இந்த பொருளாதார மந்த நிலை கடந்த 1990 ஆம் அண்டுக்கு பிறகு கணக்கிடப்பட்ட குறைந்த நடுத்தர கால வளர்ச்சி என்றும், அதேநேரம் கடந்த 20 ஆண்டுகளில் 3 புள்ளி 8 சதவீதம் என்ற குறைந்த அளவிலேயே உலக பொருளாதார மந்தநிலை சுழன்றுக் கொண்டு இருந்ததாக கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்தார்.
வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் ஆசிய நாடுகள் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் கூறினார். குறிப்பாக 2023 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியின் பாதி பங்கை இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு ஆசிய நாடுகள் கொண்டு இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளதாக கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்தார்.