டெல்லி: இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சனிக்கிழமை (ஜூன் 26) மாலை 3 மணிக்கு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தச் செய்திக்குறிப்பில், “தென்மேற்கு பருவழை வடமாநில பகுதிகளான பார்மர், தோல்பூர், அலிகார், மீரட், அம்பாலா மற்றும் அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் தொடர் மழை பெய்யக் கூடும்.
கனமழை
எனினும் அடுத்த 5 தினங்களுக்கு தென்மேற்கு பருவமழை ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் அதிகரிக்க வாய்ப்பில்லை. இருப்பினும் வடமேற்கு, மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் அடுத்த 5 தினங்களுக்கு கனமழை அல்லது மிக கனமழை பெய்யக் கூடும். அவை இமயமலைத் தொடர் பகுதிகள் மற்றும் மேற்கு வங்கம், சிக்கிம், அஸ்ஸாம், மேகாலயா ஆகும்.
இது தவிர அருணாச்சலப் பிரதேசத்தில் வருகிற 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் வருகிற 30ஆம் தேதி இடியுடன் கூடிய கனமழை அல்லது மிக கனமழை பெய்யக் கூடும்.
எச்சரிக்கை
அதேபோல் பிகார், உத்தரப் பிரதேசம் (வடக்கு), உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் ஜூலை 1 மற்றும் 2ஆம் தேதிகளில் மழை பெய்யக் கூடும். முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் பிகாரின் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.
தொடர்ந்து வட மாநிலங்கள், மத்தியப் பிரதேசம், கோவா, கர்நாடகத்தின் உள்பகுதிகள், ஆந்திரா, அந்தமான் நிகோபர் தீவுகள் உள்ளிட்ட தீவுகளில் மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று முன்னறிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு