கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், பெருந்தொற்று இரண்டாவது அலை தொடங்கியுள்ளதா என அச்சம் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், சோதனையை அதிகப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சையை அளிக்க சம்பந்தப்பட்ட அனைவரும் முன் வர வேண்டும் என இந்திய மருத்துவக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "அறிவியலுக்கு ஒவ்வாத மருந்துகளையும் சிகிச்சை முறையையும் சுயநல எண்ணத்துடன் ஊக்குவிப்பவர்களிடம் இறையாகிவிடாதீர்கள். அனுமதி வழங்கப்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசியை முன்கூட்டியே செலுத்திக் கொள்ள வேண்டும்.
தகுந்த இடைவெளி, கையை சுத்தம் செய்து கொள்ளுதல், பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பெருந்தொற்றுக்கு ஏற்ற விதிமுறைகள பின்பற்ற வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி சொல்வதுபோல் சோதனையை அதிகப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சையை அளிக்க வேண்டும்.
தேர்தல் நேரத்தில் கரோனா விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். பள்ளிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் காற்றோட்டமான இடங்களை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.