டெல்லி:மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே நடுத்தர போக்குவரத்து விமானம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. போக்குவரத்து, சரக்கு விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள நடுத்தர போக்குவரத்து விமானத்தை பயன்படுத்த உள்ளதாக இந்திய விமானப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடுத்தர போக்குவரத்து விமானம் 18 முதல் 30 டன் வரையிலான சரக்குகளை கையாளும் திறன் கொண்டிருக்கும் வகையில் தயாரிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்திய ஆயுதப்படை பாதுகாப்பு தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏவுகணைகள், கள துப்பாக்கிகள், விமானம் தாங்கிகள், ஆளில்லா விமானங்கள், போர் விமானங்கள், டாங்கர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை உள்நாட்டிலே உற்பத்தி செய்வதற்கான பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நடுத்தர போக்குவரத்து விமானத்தை தயாரிக்க இந்திய விமானப் படை திட்டமிட்டுள்ளது. இந்த விமான உற்பத்திக்கான பணியில் ரஷ்யா மற்றும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.