டெல்லி: தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்படைந்தது. தற்போது மழை குறைந்துள்ள நிலையில், வெள்ள நீர் வடியத் துவங்கியுள்ளது. இருப்பினும், சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் மக்கள் சிக்கியுள்ள பகுதிகளில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முன்னதாக கனமழையின்போது, திருச்செந்தூரில் இருந்து புறப்பட்ட செந்தூர் அதிவிரைவு ரயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு இருந்தது. அதிலிருந்த பயணிகள் ரயிலில் சிக்கி இருந்தனர். அம்மக்களை மீட்க மற்றும் அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கும் பணிகள், இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது, “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக, இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்தார்.
மேலும், மதுரை விமான நிலையத்தில் மாநில அரசால் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள், இந்திய கடற்படையின் ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டது. அந்த நிவாரணப் பொருட்கள், பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கு வழங்கப்பட உள்ளதாக சென்னை மண்டல பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.