பெங்களூரு: கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 66 இடங்களை மட்டும் பிடித்துள்ளது. காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமைய உள்ள நிலையில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இடையே முதலமைச்சர் பதவிக்கான போட்டி ஏற்பட்டுள்ளது.
அடுத்த முதலமைச்சர் சித்தராமையா தான் என அவரது ஆதரவாளர்கள் பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இதேபோல், டி.கே.சிவகுமார் தான் அடுத்த முதலமைச்சர் என அவரது ஆதரவாளர்களும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்நிலையில் ஹரிஹரபுரா மடத்தில் இருந்து ஒக்காலிக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெங்களூருவில் உள்ள டி.கே.சிவகுமார் வீட்டுக்குச் சென்று அவரை வாழ்த்தினர். மேலும், அடுத்த முதலமைச்சர் தாங்கள் தான் என்றும் அவருக்கு ஆசி வழங்கினர்.
இதைத் தொடர்ந்து லிங்காயத் சமூகத்தவர்களுக்கு சொந்தமான சித்தகானா மடத்துக்குச் சென்ற டி.கே.சிவகுமார், அங்குள்ள மடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் தும்கூர் மாவட்டத்தில் உள்ள நோனவிநாகேரா பகுதிக்கு குடும்பத்தினருடன் சென்ற சிவகுமார், ஆன்மிக குரு அஜ்ஜையாவை சந்தித்து ஆசி பெற்றார்.