ஐதராபாத்: சீக்கியர்களுக்கு என தனி நாடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலிஸ்தான் அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் ஒரு பிரிவான வாரீஸ் பஞ்சாப் டி-யைச் சேர்ந்தவர் அம்ரித் பால் சிங். இவரது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட பஞ்சாப் போலீசார் கடந்த சனிக்கிழமை இவரை கைது செய்ய முயன்றனர்.
அப்போது அம்ரித் பால் சிங் போலீசாரிடம் இருந்து தப்பி தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதையடுத்து பஞ்சாப்பில் பதற்ற நிலையில் ஏற்பட்டது. அம்ரித் பால் சிங் மற்றும் பஞ்சாப்பின் பாதுகாப்பு சூழல் குறித்து வதந்தி பரவுவதை தடுக்க பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவு இணைய சேவை முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நாளை (மார்ச். 21) வரை இணைய சேவை முடக்கத்தை அதிகாரிகள் விரிவுபடுத்தினர். மேலும் முக்கிய நகரங்களில் போலீசார், பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்நிலையில் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் அமைப்பின் ஆதராவாளர்கள் தூதரகம் மீது கற்களை வீசினர்.