ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Deep fake: மக்களை அச்சுறுத்தும் டீப் பேக் தொழில்நுட்பம்..! போலியாக உருவாக்கப்பட்டதை கண்டறிவது எப்படி? - டீப் பேக் வீடியோ விவகாரம்

How to identify and prevent Deepfake: பிரபல நடிகை ராஷ்மிகாவின் மார்பிங் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. பிரபலங்களுக்கே இப்படி என்றால் சாமானிய பெண்களின் நிலை என்ன? இந்த போலி தொழில்நுட்பத்தின் பிடியிலிருந்து தப்பிப்பது எப்படி? என இந்த தொகுப்பில் காணலாம்.

மக்களை அச்சுறுத்தும் டீப் பேக் தொழில்நுட்பம்
மக்களை அச்சுறுத்தும் டீப் பேக் தொழில்நுட்பம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 6:12 PM IST

சென்னை: ஒருவரின் உருவத்தை மற்றொருவரின் உருவத்துடன் மார்பிங் செய்வது பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால், இந்த டீப் பேக் deep fake மூலம் ஒரு நபரின் உருவத்துடன், அவர் பேசுவது போலவும் உருவாக்க முடியும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு நபரைப் போலவே மற்றொரு போலியான உருவத்தை இந்த தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்க முடியும்.

டீப் பேக்கின் ஒரு பகுதியாக, AI மற்றும் இயந்திர கற்றல் போன்ற தொழில்நுட்பங்களின் உதவியுடன் புகைப்படங்கள், ஆடியோ மற்றும் வீடியோக்களை போலியாக உருவாக்க முடியும். இது போன்ற போலியான வீடியோக்கள், ஆடியோ, புகைப்படங்கள் உண்மையானது போலவே தெரிந்தாலும், அவை போலியானவை என்று கண்டறிய அவற்றில் மறைந்திருக்கும் நுணுக்கமான சில விஷயங்களைக் கண்டறிந்தாலே போதும்.

போலியைக் கண்டறிவது எப்படி:பொதுவாகவே நமது புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ நெட்டில் உள்ள ஆபாச வலைத்தளங்களில் பார்த்தால் எவருக்கும் பதற்றம் ஏற்படும். மற்றவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற அச்சத்திலேயே பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால், இது போன்ற நேரங்களில் அவசர முடிவுகளை எடுப்பதை விட நிதானமாக சிந்தித்துச் செயல்படுவது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

இந்த வீடியோ அல்லது புகைப்படம் அவர்களுடையதா? அல்லது யாராவது மார்பிங் செய்தார்களா? இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது? என்று ஒரு கணம் யோசித்துப் பார்த்தால் உண்மை புரிந்துவிடும். பொதுவாகப் போலியாக உருவாக்கப்படும் புகைப்படம், வீடியோ, ஆடியோவில் சில வேறுபாடுகள் இருக்கும். அவற்றை சில வழிமுறைகளைப் பின்பற்றி அது உண்மையா? போலியா? என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

  • கண் அசைவுகளைக் கொண்டு டீப் பேக் வீடியோக்களை நிபுணர்களால் அடையாளம் காண முடியும். அதாவது, உண்மையான வீடியோக்களில், நபரின் வார்த்தைகள், கைகள், கண் அசைவுகள் போன்றவை ஒத்துப்போகும். அதே போலி வீடியோக்களில் பேசுவதும் கை அசைவுகளும் ஒத்துப் போனாலும் கண் அசைவுகள் வித்தியாசமாக இருக்கும். இதன் மூலம் அந்த வீடியோ உண்மையானதா அல்லது போலியா என்பதைக் கண்டறிய முடியும்.
  • மார்பிங் அல்லது டீப் பேக் மூலம் எல்லாவற்றையும் அப்படியே மீண்டும் உருவாக்குவது என்பது சாத்தியமற்றது. ஏனெனில் ஒருவரின் முகத்தை மற்றொருவரின் முகமாக மாற்றும் போது, முகத்தில் உள்ள வெளிச்சம், வண்ணங்கள், சுற்றுப்புறங்களில் உள்ள வெளிச்சம் போன்றவற்றைச் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு துல்லியமாகச் சரிசெய்ய முடியாமல் போகலாம். இதனைக் கூர்ந்து கவனித்தால் இவற்றில் உள்ள வேறுபாடுகளை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
  • சில நேரங்களில் டீப் பேக் வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஆடியோவுடன் இணைந்து இருக்கும். ஆனால் நீங்கள் கூர்ந்து கவனித்தால், ஆடியோ மற்றும் வீடியோ உள்ளடக்கத்தின் தரம் சீராக இல்லாதது அல்லது வேறுபாடுகள் இருப்பதைக் காணமுடியும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும், இவை இரண்டும் சரியாக இணைவது சாத்தியமற்றது என்று கூறப்படுகிறது.
  • ஒவ்வொருவரின் உடல் உருவமும் வித்தியாசமானதாக இருக்கும். அப்படியானால், ஒருவரின் முகத்தை மற்றொருவரின் முகமாக மாற்றினால், முகத்துடன் மற்ற உடல் உறுப்புகள் பொருந்தாது. அதாவது சற்று மெலிந்து நீண்ட முகத்தை, பருமனானவரின் உடலுடன் சேர்த்தால் எப்படி இருக்கும். மேலும், அவர்களின் கைகளும் முகபாவனைகளும் பொருந்தாமல் இருக்கும்.
  • டீப் பேக் மூலம் உருவாக்கப்படும் வீடியோக்கள் உண்மையான முகபாவனைகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்காது. மேலும், முகபாவனைக்கும் பேச்சுக்கும் வித்தியாசம் இருந்தாலும், முகபாவனை வீடியோவின் சூழலுடன் தொடர்பில்லாததாக இருந்தால், அதனைப் போலியான வீடியோ என நிபுணர்கள் கருதுகின்றனர். மார்பிங் அல்லது டீப் பேக் மூலம் உருவாக்கப்படும் வீடியோவில் முகத்தைச் சரியாகப் பொருத்தாமல் விட்டாலும், போலியானதைக் கண்டறிவது எளிது.
  • டீப் பேக் வீடியோக்கள் அல்லது புகைப்படங்களில் இயற்கையான உடல் தோரணையை நீண்ட நேரம் தக்கவைக்க முடியாது. எனவே, உடலின் தோரணைகள் மற்றும் அசைவுகளை உன்னிப்பாகக் கவனிப்பதன் மூலம் அவற்றில் தெரியும் வித்தியாசம் மூலம் போலியானது எனக் கண்டறிய முடியும்.
  • இதையெல்லாம் கூர்ந்து கவனித்த பிறகும் அந்த வீடியோ போலியா இல்லையா என்ற சந்தேகம் எழுந்தால், அதை நிரூபிக்கக் கூகுளில் உள்ள 'Search by image' எனும் ஆப்ஷனை பயன்படுத்தலாம். இதற்காக வீடியோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அந்த படத்தை இந்த ஆப்ஷனில் பதிவேற்றம் செய்தால் அது தொடர்பான அனைத்து வீடியோக்களும் தோன்றும். அதில் உண்மையான வீடியோ மற்றும் அதைப் பயன்படுத்தி மார்பிங் செய்யப்பட்ட பிற வீடியோக்களும் இருக்கும்.
  • இதுபோன்ற சந்தர்ப்பங்களில், குழப்பமடைவது மற்றும் கவலைப்படுவதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அந்த வீடியோக்களை நீக்கி, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.

வருமுன் காப்பதே சிறந்தது:இம்மாதிரியான சிக்கல்கள் வராமல் முன்கூட்டியே கவனமாக இருப்பது நல்லது என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. எனவே, சமூக ஊடகங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தகவல்களைப் பதிவேற்றம் செய்யும் போது டீப் பேக் மற்றும் மார்ஃபிங்கால் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

  • சமூக ஊடகங்களில் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தனியுரிமையை அதாவது பிரைவசி பாலிசிகளை பின்பற்றுவது அவசியம். இதன்மூலம் உங்கள் சமூக வலைத்தள பக்கத்தை நம்பகமான நபர்கள் மட்டுமே பார்க்கும் படி செய்ய முடியும்.
  • நீங்கள் பகிரும் தகவல், புகைப்படங்கள், வீடியோக்கள் பற்றி யாரேனும் எதிர்மறையான கருத்துகளைப் பதிவிட்டால் அவர்களை உடனடியாக பிளாக் செய்யலாம். இதனால் பல அச்சுறுத்தல்கள் தவிர்க்கப்படும்.
  • சமூக வலைத்தளங்களில் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைப் பதிவேற்றுவதற்கு முன் ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். அனைவரும் பார்ப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று முடிவு செய்யும் போது மட்டும் பதிவிடுவது நல்லது. மேலும், மற்றவர்களுக்கு ஆட்சேபனை ஏற்படுத்தக்கூடிய தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், தகவல்களைப் பதிவிடாமல் இருப்பது நல்லது.
  • சிலர் தங்கள் சமூக நிலை (social status) தொடர்பான விஷயங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள். இதனால் உங்கள் புகைப்படங்கள், வீடியோக்களை மார்பிங் மற்றும் டீப் பேக் செய்து பணத்திற்காக உங்களை மிரட்டும் அபாயம் உள்ளது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
  • சிலர் காபி கடைகள், விமான நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களில் இலவசமாகத் தரப்படும் வைஃபை நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துகின்றனர். இதனால் உங்கள் மொபைலில் உள்ள தகவல் திருடப்படும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே, இதுபோன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழங்கப்படும் இலவச வை-பை சேவையைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
  • சமூக ஊடகங்களில் சாட்டிங் செய்யும் போதும் மற்றும் புகைப்படங்கள்,வீடியோக்களை பகிரும் போது கவனமாக இருங்கள். பொதுவான விஷயங்களைத் தவிர தனிப்பட்ட விஷயங்களைப் பகிராமல் இருப்பது நல்லது. ஏனெனில் சிலர் சாட்டிங் ஸ்கிரீன்ஷாட்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தவறாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.
  • எப்போதாவது சில லின்க் மற்றும் வாய்ஸ் மெசேஜ் உங்கள் நண்பர் அனுப்பியது போல் வரும். ஆனால் அதிலும் பாதிப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அவற்றைத் திறக்கும் முன், ஒருமுறை அவர்களை அழைத்து, இவை அவர்களால் அனுப்பப்பட்டதா எனச் சரிபார்ப்பது நல்லது. இதனால் ஹேக்கர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
  • வலுவான கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) வைத்திருப்பது மற்றும் அவற்றை அடிக்கடி மாற்றுவதன் மூலம் சமூக ஊடக கணக்குகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். அந்தந்த சமூக ஊடக நிறுவனங்களின் கொள்கைகளை (policies) சரிபார்ப்பதன் மூலமும் உங்கள் சமூக ஊடக கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

இதையும் படிங்க: இந்தியாவில் சாம்சங் 'கேலக்ஸி டேப் A9' டேப்லெட் அறிமுகம்.. சிறப்பம்சங்கள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details