தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பழங்களின் முழு சத்துக்களை பெற எப்படி சாப்பிட வேண்டும்? அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்! - fruits benefits in tamil

How to eat fruits in Tamil: பழத்தின் சத்துக்களை முழுமையாக பெற அவற்றை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும், எந்த அளவு சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்க அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

பழங்களை சாப்பிட சரியான நேரம் எது
பழத்தின் சத்துக்களை முழுமையாக பெற எப்படி சாப்பிட வேண்டும்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 2:12 PM IST

சென்னை: பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு சத்து, நல்லது என்று நமக்கு தெரியும். பழங்கள் உணவாகவும், மருந்தாகவும் செயல்பட்டு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. பழங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சைவ உணவாகும். பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் நம் உடலுக்குள் வருவதை தடுக்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப அளவறிந்து பழங்களை எடுத்துக் கொள்ளுதல் உடல் நலத்திற்கு நல்லது.

பழங்களை சாப்பிட சரியான நேரம் எது தெரியுமா?

பழங்களை நாம் எப்பொழுதும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அவை எளிதில் ஜீரணம் ஆகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உணவு உண்பதற்கு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு முன்பு, உணவு உண்ட ஒரு மணி நேரத்துக்கு பிறகு பழங்களை எடுத்து கொள்ள வேண்டும். உடலின் வளர்சிதை மாற்றம், அதாவது மெடாபாலிஸம் குறைவதால் பழங்களை மாலையில் சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஏன் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்?

நாம் பழங்களை உணவுடன் சேர்த்து அல்லது உணவு உண்ட சில தருணங்களில் சாப்பிடும் பொழுது அவை உணவுடன் கலந்து வயிற்றுக்குள் செல்கிறது. வயிற்றில் உணவு செரிப்பதற்கு தாமதமாவதால், பழங்கள் உணவுடன் கலந்து அழுகி, வாயு உண்டாகி செரிமான பிரச்சனையை உண்டாக்கும். எனவே, பழங்களை வெறும் வயிற்றில் சப்பிட்டால் அவை எளிதில் ஜீரணமாகி, அவற்றின் முழு பலனும் நமக்கு கிடைக்கும். வெறும் வயிற்றில் பழங்களை எடுத்துக் கொண்டால் நரை முடி தோன்றுதல், வழுக்கை விழுதல், கருவளையம், நரம்பு பிரச்சனைகளில் இருந்து காக்கிறது.

முழு பலன்களைப் பெற பழங்களை எப்படி சாப்பிட வேண்டும்?

பழங்களை எப்பொழுதும் வெட்டியவுடன் சாப்பிட வேண்டும். அவற்றை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து நாட்கள் கழித்து சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும். திராட்சை மற்றும் மாதுளை சாப்பிடும்போது சிலர் அதில் உள்ள கொட்டையை அகற்றி சாப்பிடுவர். பழத்தை கொட்டையோடு சாப்பிடும் போது அதில் உள்ள முழுப்பலனும் நமக்கு கிடைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்துக்களில் அதிக அளவு அவற்றின் தோலில் உள்ளது. எனவே, பழத்தை எப்பொழுதும் தோலுடன் மென்று சாப்பிட வேண்டும் ஆனால் இது அனைத்து பழங்களுக்கும் பொருந்தாது.

எந்த பழத்தை எப்படி சாப்பிட வேண்டும்?

1.பலாப்பழம்:பலாப்பழத்தை சாப்பிட்டவுடன் ஏற்படும் மந்த உணர்வை தடுக்க அதனுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

2. கொய்யாப்பழம்:கொய்யாப்பழம் சாப்பிடும் போது ஏற்படும் கரகரப்பை தடுக்க அவற்றுடன் மிளகு கலந்து சாப்பிட வேண்டும்.

3. வெள்ளரிப்பழம்:வெள்ளரிப்பழத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது.

ஏன் நாம் பழங்கள் சாப்பிட வேண்டும்?

பழங்களில் அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளது. எனவே அவற்றை நாம் எடுத்துக் கொள்ளும் போது உடலுக்கு நன்மை விளைவிக்கிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செலவழிக்கும் பணத்தை முன்கூட்டியே பழத்தை வாங்கி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கலாம் என்கின்றனர் நம் முன்னோர்கள்.

பழம் நல்லதா? ஜூஸ் நல்லதா?

ஜூஸ் குடிப்பதை காட்டிலும் பழத்தை அப்படியே சாப்பிடுவது சிறந்தது. பழத்தை ஜூஸ் போட்டு சாப்பிடுவதால் அவற்றின் நார் சத்துக்கள் மற்றும் இரும்பு சத்துக்கள் நமக்கு கிடைப்பதில்லை. ஜூஸை வடிகட்டும்போது அவை திப்பியாக தங்கி விடுகின்றன. எனவே, பழத்தை அப்படியே எடுத்துக் கொள்வது சிறந்த முறையாகும். ஆனாலும், பழச்சாறாக குடிக்கும் போது வெள்ளை சர்க்கரையை தவிர்த்து தேன் கலந்து சாப்பிடுவது சிறந்தது. மேலும், பழச்சாறு குடிக்கும் போது அவற்றை சிறிது சிறிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பழச்சாறு உமிழ் நீருடன் கலந்து எளிதில் ஜீரணமாகும். பழச்சாறுகளை இயற்கையான முறையில் தயாரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ரசாயனம் கலந்த பழச்சாறுகளை எடுத்துக் கொள்வதை தவிர்த்தல் வேண்டும்.

ஷோகேஸ் பழங்கள்

பார்பதற்கு வண்ணமயமாகவும், வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பழங்களில் அதிக சத்து உள்ளது என்று நினைத்து அவற்றை வாங்கி சாப்பிடுகின்றன. ஆனால், அந்தந்த பருவத்தில் விளையும் பழங்களே உடலுக்கு நல்லதாகும். ஏனென்றால், அந்தப் பழங்கள் அந்த குறிப்பிட்ட காலத்தில் வரக்கூடிய வியாதிகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

உதாரணத்திற்கு, கோடைகாலத்தில் விளையும் தர்பூசணியில் அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதால் அவற்றை நாம் எடுத்துக் கொள்ளும் போது உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கிறது. ஹைபிரிட் ரக பழங்கள் சுவையாக இருக்கும் ஆனால், குறைந்த அளவிலான சத்துக்கள் மட்டுமே இருக்கும் எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க:World Heart Day 2023: உலக இதய தினமான இன்று இதயத்தின் முக்கியத்துவம், மாரடைப்பு பிரச்சனைக்கான காரணங்களை அறிவோம்!

ABOUT THE AUTHOR

...view details