அமராவதி:ஆந்திர மாநிலத்தில் கடலில் கலக்கும் கோதாவரி, கிருஷ்ணா நதி நீரினைத் தடுக்க மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசு போலாவரம் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது.
இத்திட்டத்தை விரைந்து முடிக்க கட்டுமான பணிகள் விரைந்து நடத்தப்பட்டன. இவை சமீபத்தில் கின்னஸ் சாதனையிலும் இடம்பிடித்தது. இந்நிலையில் இந்தத் திட்டம் குறித்து ஆந்திர எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்படும் இத்திட்டத்தில் எவ்வாறு மறைந்த முதலமைச்சரும், தற்போதைய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையுமான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சிலை வைக்க அனுமதி கிடைத்திருக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களில் எவ்வாறு மாநில அரசு அதிகாரம் செலுத்த முடியும். இத்திட்டத்திற்காக ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு எந்தவொரு நிதியையும் செலவழிக்கவில்லை. எனவே, அவர் விரும்பியதை எல்லாம் இத்திட்டத்தில் செய்ய எந்த உரிமையும் இல்லை.
அதுமட்டுமின்றி, ஜெகன் மோகன் ரெட்டி இந்தச் சிலையை நிறுவுவதில் மட்டுமே ஆர்வம் கொண்டுள்ளார். மக்களின் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்திசெய்யவும், முற்போக்கு சிந்தனையுடன் திட்டங்களை நிறைவேற்றவும் அவர் ஆர்வம் கொள்ளவில்லை எனக் குற்றம் சாட்டிய அவர், மாநில அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு தெலுங்கு தேசம் கட்சி கண்டனம் தெரிவிப்பதாகக் கூறினார்.
இதையும் படிங்க: நதிநீர் இணைப்பு திட்டத்தால் ஆறுகளில் கானல் நீர் மட்டுமே வரும்- பேராசிரியர் ஜெயராமன்