டெல்லி : மக்களவையில் நடந்த டெல்லி சேவைகள் மசோதா மீதான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சிகள் டெல்லியின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், கூட்டணியை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார்.
டெல்லி சேவைகள் தொடர்பான சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உரிமை இருப்பதாக தெரிவித்த அமித் ஷா, யூனியன் பிரதேசம் தொடர்பான சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்திற்கு உரிமை இருக்கிறது என உச்ச நீதிமன்றமே கூறி இருப்பதாக தெரிவித்தார். டெல்லியில் முன்னர் நடந்த ஆட்சியில் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட பணிகள் முறைப்படி நடந்ததாகவும், கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அனைத்தும் தலைகீழ் நிலையாக மாறியதாகவும் ஆம் ஆத்மி கட்சியை அமைச்சர் அமித் ஷா மறைமுகமாக சாடினார்.
ஜவஹர்லால் நேரு, சர்தார் பட்டேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்டோர் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்ததாக அமித் ஷா கூறினார். மக்களுக்காக பணியாற்றுவதை தவிர்த்து மத்திய அரசுடன் சண்டையிடுவைதையே நோக்கமாக ஆம் ஆத்மி கட்சி கொண்டு இருப்பதாக அமித் ஷா தெரிவித்தார்.
முதலமைச்சர் குடியிருப்பை புனரமைப்பதில் கூட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் செய்ததாக அமித் ஷா குற்றஞ்சாட்டினார். தலைநகர் டெல்லியின் நலனை எதிர்க்கட்சிகள் கூட்டணி கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் மாறாக கூட்டணியில் கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது என்று அவர் தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடை மாற்றம் குறித்த அதிகாரம் துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசிடமே இருந்த நிலையில் அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து டெல்லியில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளை இடமாற்றி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில் கடந்த மே மாதம் 11ஆம் தேதி, டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்க முதலமைச்சர், தலைமைச் செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் அடங்கிய தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைத்து அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
அவசரச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச பல்வேறு மாநிலங்களின் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அதேநேரம் அவசர சட்டத்திற்கு மாற்றாக மசோதாவை நடப்பு நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை டெல்லி சேவைகள் மசோதாவுக்கு அனுமதி அளித்த நிலையிம், மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு உள்ளதால மசோதா மீதான விவாதம் தொடந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க :வெளிநாடுகளில் இருந்து லேப்டாப் கேட்ஜெட்ஸ் இறக்குமதிக்கு தடை - மத்திய அரசு!