டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை, கடந்த 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. இதைத் தொடர்ந்து அவரை 5 நாட்கள் காவலில் எடுத்த சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் சிசோடியாவின் சிபிஐ காவலை மேலும் 2 நாட்களுக்கு நீதிமன்றம் நீட்டித்தது.
இந்நிலையில் 7 நாட்கள் காவல் முடிந்து, மணீஷ் சிசோடியா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.கே.நாக்பால் முன்னிலையில் இன்று (மார்ச் 6) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சிசோடியாவிடம் தற்போதைக்கு மீண்டும் விசாரணை நடத்த தேவையில்லை. தேவையெனில் பின்னர் அவரிடம் விசாரணை நடத்த கோரப்படும். அவர் கைது செய்யப்பட்டதை ஆம் ஆத்மி கட்சி அரசியல் ஆக்குகிறது" என குற்றம்சாட்டினார்.
பின்னர் சிசோடியா தரப்பில், "சிறைக்குள் மருந்துகள், மூக்குக் கண்ணாடி, பகவத் கீதை ஆகியவற்றை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும் சிறையில் தியானம் செய்யும் அறையை ஒதுக்கித்தர வேண்டும்" என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மணீஷ் சிசோடியாவை திகார் சிறையில் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி நாக்பால் உத்தரவிட்டார். 2 மூக்கு கண்ணாடிகள், குறிப்பேடு, பேனா, பகவத் கீதை புத்தகம் ஆகியவற்றை அவர் எடுத்துச் செல்லவும் அனுமதி அளித்தார். தியானம் செய்யும் வகையில், அறை ஒதுக்குவது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும் எனவும் நீதிபதி பரிந்துரைத்தார். இதையடுத்து மணீஷ் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.