சோனிபட் : டெல்லி - ஜம்மு ராஜதானி விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை. 28) இரவு ஜம்மு நோக்கி சென்ற ராஜதானி விரைவு ரயிலுக்கு, இரவு 9 மணி அளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து அரியானா மாநிலம் சோனிபட் ரயில் நிலையத்தில் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயிலில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், ரயில்வே பாதுகாப்பு படையினர், அரசு ரயில்வே போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களுடன் சேர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் மோப்ப நாய் படையும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
ஏறத்தாழ 4 மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், வெடிகுண்டு ஏதும் ரயிலில் அகப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராஜதானி விரைவு ரயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஏறத்தாழ 1 மணி வரை ரயிலில் சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏறத்தாழ 4 மணி நேர நீண்ட சோதனைக்கு பின்னர் நள்ளிரவு 1.30 மணி அளவில் மீண்டும் ரயில் புறப்பட்டு சென்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். டெல்லியில் இருந்து ஜம்மு நோக்கி சென்ற ராஜதானி விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்தும், மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக வெடிகுண்டு மிரட்டல் காரணமாக 9 மணி அளவில் சோனிபட் ரயில் நிலையத்தில் ராஜதானி விரைவு ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் இல்லாததால் இரவு 11.30 மணி வரை ரயிலில் சோதனை மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் வருகைக்கு பின்னர் ரயிலில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பயணிகள் தெரிவித்து உள்ளனர்.
ரோட்டக்கில் இருந்து வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் அழைத்து வரப்பட்ட நிலையில், ரயில் நிறுத்தப்பட்டு ஏறத்தாழ 3 மணி நேரம் கழித்து சோதனை மேற்கொள்ளப்பட்டதால் அதுவரை பீதி உணர்வுக்குள் தாங்கள் தள்ளப்பட்டதாக ரயில் பயணிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க :இம்பால் விரைந்த INDIA கூட்டணியின் பிரதிநிதிகள் குழு.. கலவரம் பாதித்த இடங்களில் ஆய்வு!