டெல்லி: டெல்லி ஜஹாங்கிர்புரியில், கடந்த மாதம் ஹனுமன் ஜெயந்தியையொட்டி நடந்த ஊர்வலத்தில், இந்து மற்றும் இஸ்லாமிய மக்களிடையே மோதல் ஏற்பட்டு, கலவரம் வெடித்தது. இதைத்தொடர்ந்து கலவரம் நடந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள் திட்டமிட்டு அகற்றப்படுவதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், ஜஹாங்கிர்புரி குஷல் சவுக் பகுதியில், இஸ்லாமியர்கள் மற்றும் இந்துகள் ஒன்றாக சேர்ந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கியும், கட்டித்தழுவியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட தப்ரீஸ் கான் கூறுகையில், ஜஹாங்கிர்புரி மக்களுக்கு கடந்த மாதம் மிகவும் நெருக்கடியான சூழல் இருந்ததாகவும், இன்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இரு மதத்தினரினிடையே நல்லிணக்கம் மற்றும் அமைதி நிலவ வலியுறுத்தி, தாங்கள் இனிப்பு வழங்கி கொண்டாடியதாகவும் தெரிவித்தார். இது இரு மதத்தினரிடையே பரஸ்பரம் உள்ள மரியாதையை காட்டுகிறது என்றும் கூறினார். ஜஹாங்கிர்புரியில் நிலைமை சீராகி வருவதாகவும், விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தப்ரீஸ் கான் தெரிவித்தார்.
ஜஹாங்கிர்புரியில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கப்போதுமான அளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்துப்பகுதிகளிலும் அமைதி நிலைநிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தாயுடன் தகாத உறவில் இருந்த நபரின் பிறப்புறுப்பை அறுத்த மகள்!