கர்நாடகா மாநில கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது தொடர்பாக எழுந்த வழக்குகள் மீதான விசாரணை கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் 11 நாள்களாக நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், "ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானது அல்ல. ஹிஜாப் தடைக்கு எதிராக சரியான முகாந்திரங்கள் இல்லை. குறிப்பாக சீருடை தொடர்பாக ஆணை வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.
எனவே, கர்நாடகா அரசு பிறப்பித்த அரசாணை செல்லும். ஹிஜாப் தடைக்கு எதிராக மாணவிகள் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன" என தெரிவித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மேல்முறையீட்டு மனுவில், "கர்நாடக அரசின் அரசாணையின் அடிப்படையில், உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது, மதச்சார்பின்மை, சமத்துவம் என்ற போர்வையில் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய மாணவிகளின் நம்பிக்கையை மறைமுகாக தாக்கும் நோக்கம் கொண்டுள்ளது. இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்" குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஹிஜாப் தடை செல்லும் - கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவு