டெல்லி:ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 5 அன்று, காஷ்மீரின் பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும்விதமாக பாகிஸ்தான் கடைப்பிடிக்கும் 'காஷ்மீர் ஒற்றுமை நாளை' ஆதரித்து ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்த வாகன நிறுவனமான ஹுண்டாய்க்கு எதிராக இந்தியர்கள் ஹுண்டாயைப் புறக்கணிப்போம் எனக் குரல் எழுப்பியதை அடுத்து அப்பதிவு நீக்கப்பட்டது.
பாகிஸ்தானில் இயங்கும் தென்கொரிய நிறுவனமான ஹுண்டாய் சமூகவலைதளப் பிரிவான ட்விட்டரில், "நமது காஷ்மீர் சகோதரர்களின் தியாகத்தை நினைவுகூருவோம், சுதந்திரத்திற்கான அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகத் துணை நிற்போம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஹுண்டாயைப் புறக்கணிப்போம் - இந்தியர்கள்
மேலும், அதில், காஷ்மீர் ஒற்றுமை நாள் எனப் பொருள்படும் #KashmirSolidarityDay என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளது. இந்தப் பதிவால் கோபமடைந்த இந்தியர்கள், ட்விட்டரில் ஹுண்டாய் இந்தியாவை டேக் செய்யத் தொடங்கினர், மேலும் இப்பதிவு குறித்து கேள்வி எழுப்பும் அவர்கள், இந்த விவகாரத்தில் அந்நிறுவனத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து விளக்க வேண்டும் எனவும் வலியுறுத்திவருகின்றனர்.
#BoycottHyundai என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யத் தொடங்கிய இந்தியர்கள், ஹுண்டாய் தயாரிப்புப் பொருள்களைப் புறக்கணிக்குமாறு அழைப்புவிடுத்தனர். மேலும் பலர் இந்தக் கருத்து குறித்து ஹுண்டாய் தெளிவுப்படுத்த வேண்டும் எனவும், மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர்.
இதையடுத்து, இது குறித்த அறிக்கை வெளியிட்ட அந்நிறுவனம், "ஹுண்டாய் மோட்டார் இந்தியா 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இயங்கிவருகிறது. நாங்கள் தேசியவாதத்திற்கு மரியாதை கொடுப்பதில் எங்களது வலுவான நெறிமுறைகளில் உறுதியாக உள்ளோம்.
பதிவு நீக்கம் - இந்தியாவுடனான நிலைப்பாட்டில் உறுதி
கோரப்படாத இந்தப் பதிவு மாபெரும் நாட்டுக்கான நமது ஈடு இணையற்ற சேவையைப் புண்படுத்துகிறது. ஹுண்டாய் நிறுவனத்திற்கு இந்தியா இரண்டாவது தாய் வீடு, நாங்கள் தேவையற்ற தகவல்களில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளோம்.
அந்தவிதப் பார்வையை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கின்றோம். இந்தியாவுடனான எங்களது நிலைப்பாட்டில், நாங்கள் தொடர்ந்து நாட்டுக்காகவும், அதன் குடிமக்களுக்காகவும் உழைப்போம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை பாகிஸ்தான் ஹுண்டாய் நிர்வாகம் இது குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை, இருப்பினும் அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிவிட்டது. ஹுண்டாய் நிஷாத்துடன் (ஹுண்டாய் பாகிஸ்தான்) கூட்டாளியான தென்கொரிய மோட்டார் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய சந்தையை வைத்துள்ளது.
2028-க்குள் ஆறு வாகனங்களில் 4000 கோடி ரூபாய் முதலீடு
ஆட்டோமொபைல் துறையில் மாருதி சுசுகிக்கு அடுத்து இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது ஹுண்டாய் மோட்டார். இந்நிறுவனம் உள்நாட்டுச் சந்தையில் தற்போது, கிரெட்டா (Creta), வெனுய் (Venue) உள்பட 12 மாடல்களை விற்பனை செய்துவருகிறது.
2028ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஆறு வகை மின் வாகனங்களில் (electric vehicles) 4,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக கடந்தாண்டு டிசம்பரில் வாகன உற்பத்தியாளர் அறிவித்துள்ளார்.
அடுத்த சில ஆண்டுகளில் அதன் தற்போதைய வரம்பின் அடிப்படையில் மாடல்களின் கலவையையும், அதன் உலகளாவிய தளமான 'E-GMP' அடிப்படையில் முற்றிலும் புதிய வாகனங்களையும் வெளியிட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 1967இல் தொடங்கப்பட்ட ஹுண்டாய் மோட்டார் நிறுவனம் தற்போது 200 நாடுகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்களுடன் இயங்கிவருகிறது.
இதையும் படிங்க: Hyundai Motor: 1000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய ஹுண்டாய் நிறுவனம்