திருச்சூர் (கேரளா): கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தின் பலப்பிள்ளி பகுதியில் உள்ள ரப்பர் எஸ்டேட்டில் யானைக்குட்டிகள் அடங்கிய 40 யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும், எஸ்டேட்டில் உள்ள பல ரப்பர் மரங்களை வேரோடு சாய்த்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் பட்டாசு வெடித்து யானை கூட்டத்தை எஸ்டேட்டில் இருந்து துரத்த மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
கோடைக்காலம் என்பதால் யானைக் கூட்டம் தண்ணீர் தேடி தோட்டங்களுக்குள் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எஸ்டேட் பணியாளர்கள் அதிகாலை 3 மணியளவில் எஸ்டேட்டுக்கு வருவது வழக்கம் என்பதால், பணியாளர்கள் யாரும் அதிகாலை நேரங்களில் பணிக்கு வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். பணியாளர்கள் தனியாக வராமல் கூட்டமாக வரவேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.