டெல்லி:மதச்சார்பற்ற ஜனதா தள நிறுவனரும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடா, முன்னாள் முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாராசாமியும் நேற்று (செப் 21) நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்ததாக கூறப்பட்டது.
மேலும், அவர்கள் சந்திப்பின் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டனியில், மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து விட்டதாக கூறப்பட்டது. வருகிற 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பாஜக அதன் கூட்டணியை வலுப்படுத்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. அந்த கூட்டத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பங்கேற்காமல் இருந்தது. மேலும், தனது ஆதரவு யாருக்கு என்பதையும் தெரிவிக்காமல் மதச்சார்பற்ற ஜனதா தளம் இருந்து வந்தது.
இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் அமித்ஷா, அவரது X சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுடன் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான ஹெச்.டி.குமாரசாமியை சந்தித்தேன். பிரதமர் மோடியின் மீதான அவரது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இந்தியாவின் வளர்ச்சிக்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் மதச்சார்பற்ற ஜனதா தளம் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் அங்கமாக இருக்க முடிவெடுத்துள்ளது. NDA குடும்பத்திற்கு மதச்சார்பற்ற ஜனதா தளத்தை வரவேற்கிறேன்” என பதிவிட்டு உள்ளார்.