பெங்களூரு :மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவராக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி ஆபார வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. பாஜக 66 இடங்களிலும், முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் மட்டும் வென்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பை கோட்டை விட்டன.
இதனிடையே பாஜக தலைமையிடத்தை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்திய குமாரசாமி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து சந்திக்க உள்ளதாக அறிவித்தார். இதை மதச்சார்பற்ற தேசிய ஜனநாயக கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவு கவுடா உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் இணைந்தது மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் உள்ள இஸ்லாமிய தலைவர்களுக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பாஜக கூட்டணி தொடர்பாக இஸ்லாமிய தலைவர்கள் கட்சிக்குள் தொடர் கேள்விகளை எழுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜகவுடனான கூட்டணி தொடர்பாக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக கர்நாடக மாநில மதச்சார்பற்ற ஜனதா தலைவர் சி.எம். இப்ராஹிம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், கர்நாடக மாநில மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் பதவியில் இருந்து சி.எம். இப்ராஹிம் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியை அக்கட்சியின் தேசியத் தலைவர் தேவுகவுடா நியமித்து உள்ளார். இது தொடர்பாக ஜேபி பவனில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தேசியத் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடா, மாநில தலைவர்கள், மாநில நிலைக் குழு உறுப்பினர்கள், கட்சி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேவு கவுடா, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநிலத் தலைவராக குமாரசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை அவர் தலைமையில் கட்சி எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. திப்பேசுவாமி, மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், மாநிலத் தலைவர் குமாரசுவாமியுடன் ஆலோசனை நடத்தி மற்றத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மூன்று நாட்களில் அறிவிக்கப்படுவார்கள் என்றும் தேவு கவுடா தெரிவித்தார். தொடர்ந்து கர்நாடக மாநில மதச்சார்பற்ற ஜனதா தலைவராக குமாரசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை அவருக்கு தேவுகவுடா வழங்கினார்.
இதையும் படிங்க :சொத்து குவிப்பு வழக்கில் டி.கே.சிவக்குமாருக்கு ஏமாற்றம்! கர்நாடக உயர் நீதிமன்றத்தால் உருவான சிக்கல்!