டெல்லி: இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ள பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருள் விவகாரம் தொடர்பாக ஏன் நாடாளுமன்ற அவைகளில் விவாதிக்கக்கூடாது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வியெழுப்பியுள்ளார்.
பெகாஸஸ் மென்பொருள் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமென வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்த பணிகளும் நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம், காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூனா கார்கே தலைமையில் நடந்தது.
இதில் ராகுல், திமுக எம்.பி., திருச்சி சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில்," நாடாளுமன்றத்தை இயங்க அனுமதிக்கவில்லை எனக்கூறி எதிர்க்கட்சிகளை பிரதமர் அவமதிக்கிறார்.
நாங்கள், குடிமக்கள், விவசாயிகள், நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரங்களை தான் எழுப்புகிறோம்" என்றார்.
கூட்டம் முடிந்த பின்னர் ராகுல் காந்தி கூறுகையில், ‛பணவீக்கம், பெகாசஸ் மற்றும் விவசாயிகள் பிரச்னைகளில் நாங்கள் சமரசம் செய்ய விரும்பவில்லை.
இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். ஒட்டுக் கேட்பதற்காக பெகாசஸ் ஸ்பைவேரை இந்திய அரசு வாங்கியதா? இல்லையா என்ற ஒரே ஒரு கேள்வியை தான் நாங்கள் கேட்கிறோம். அதற்கு மத்திய அரசு பதில் சொல்லியாக வேண்டும்.