ஹல்த்வானி: கடந்த 2021ஆம் ஆண்டு சல்மான் கெளஷிக் இயக்கத்தில் பங்கஜ் திரிபாதி நடிப்பில் 'காகஸ்' திரைப்படம் வெளியானது.
இந்தப் படத்தில் நாயகன் லால் பிஹாரியின் உறவினர்கள், அவர் உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாக அரசு ஆவணங்களைத் தயாரித்து, அவரது சொத்துகளைப் பறிப்பார்கள். அதை எதிர்த்து நாயகன் போராடுவதே இப்படத்தின் கதை. இப்படம் ஒரு உண்மைச்சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் 'காகஸ்' திரைப்படத்தைப்போலவே உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானியிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. நைனிடால் மாவட்டம், பாங்கோட்டைச்சேர்ந்த ஹரிகிஷன் புத்தலகோட்டி என்பவர், தான் உயிரோடு இருப்பதைப்பதிவு செய்வதற்காக மாஜிஸ்திரேட்டை அணுகியுள்ளார்.
இதைக் கேட்ட மாஜிஸ்திரேட் தீபக் ராவத் அதிர்ச்சிக்குள்ளானார். இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், பாங்கோட்டில் உள்ள தனது நிலத்தை அபகரிப்பதற்காக வனத்துறை அலுவலர் ஒருவர், அரசு ஊழியர்களின் உதவிடன் தான் இறந்துவிட்டதாக ஆவணங்களை தயாரித்ததாகவும், அந்தச்சான்றிதழை வைத்து 2010-ல் தனது நிலத்தை பறித்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதற்கு தாசில்தார் குஷ்யா குடௌலி உள்ளிட்ட ஊழியர்களும் உடந்தையாக இருந்தார்கள் என்றும் தெரிவித்தார். இதையடுத்து ஆவணங்களில் தான் உயிரோடு இருப்பதைப்பதிவு செய்ய அரசு அலுவலகங்களுக்கு அலைந்து வருவதாகவும், இதுவரை அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஹரிகிஷன் வேதனைத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஹரிகிஷனின் கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க தாசில்தார் குஷ்யா குடெளலிக்கு மாஜிஸ்திரேட் தீபக் ராவத் உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீபக் ராவத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நேரு விளையாட்டு அரங்கில் காவலர் தற்கொலை