வாரணாசி:உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள்களின் சிலைகளை தினமும் வழிபட அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் இந்து பெண்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஞானவாபி மசூதியில் கள ஆய்வு நடத்தவும், அதை வீடியோவாக பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பலத்த பாதுகாப்புடன் நடந்த கள ஆய்வில், மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மசூதி நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கை வாரணாசி நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கை கடந்த மே மாதம் 24ஆம் தேதி முதல் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இன்று(ஆக.18) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
ஞானவாபி மசூதி வழக்கை தொடர்ந்த பெண்ணின் கணவருக்கு கொலை மிரட்டல் - வழக்குப்பதிவு! - வாரணாசி மாவட்ட நீதிமன்றம்
ஞானவாபி மசூதி வழக்கை தொடர்ந்த இந்துப் பெண்களில் ஒருவரது கணவருக்கு பாகிஸ்தான் தொலைபேசி எண்ணிலிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே வழக்கு தொடர்ந்த இந்து பெண்களில் ஒருவரான லஷ்மி தேவியின் கணவர் சோகன் லால் ஆர்யாவுக்கு கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் தொலைபேசி எண் மூலம் அழைத்த நபர் ஒருவர், வழக்கை வாபஸ் பெறும்படி வற்புறுத்தியதாகவும், இல்லை என்றால் உதய்பூர் கன்ஹையா லாலைப் போல தலை துண்டித்து கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் ஆர்யா தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 19ஆம் தேதியும், ஜூலை 20ஆம் தேதியும் அதே பாகிஸ்தான் எண்ணில் இருந்து தனக்கு மிரட்டல் வந்ததாகவும் தெரிவித்தார். இதுதொடர்பாக சோகன் லால் ஆர்யா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.