அகமதாபாத்: குஜராத் சுயேச்சை எம்எல்ஏவும், பட்டியலினத் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி எம்எல்ஏ, பலம்பூரில் உள்ள வீட்டில் இருந்தபோது, நேற்று (ஏப்.20) நள்ளிரவு 11.30 மணிக்கு காவலர்களால் கைதுசெய்யப்பட்டார்.
இன்று (வியாழக்கிழமை) அவர் அஸ்ஸாம் மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளார். ஒரு ட்வீட் தொடர்பாக ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தகவலை தெரிவித்துள்ள வட்கம் தொகுதி எம்எல்ஏ ஜிக்னேஷ் மேக்வானி, “எந்தப் பொய் புகாருக்கும் பயப்பட மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஜிக்னேஷ் மேவானிக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் களமிறங்கியுள்ளனர். ஜிக்னேஷ் மேவானியின் கைதுக்கு எதிராக ட்விட்டரில் கனையா குமார், “ஜிக்னேஷ் மேவானி அஸ்ஸாம் மாநில போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் இன்றிரவே அஸ்ஸாம் கொண்டுசெல்லப்படலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஜிக்னேஷ் மேவானியின் கைது நடவடிக்கைக்கு எதிராக #JigneshMevaniArrested #FreeJigneshMevani உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகிவருகின்றன. எனினும் ஜிக்னேஷ் மேவானி மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை நகலை காவலர்கள் பகிரவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : காங்கிரஸை காப்பாற்றினால் நாட்டை காப்பாற்ற முடியும் - கனையா குமார்