ஹைதராபாத்:குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 182 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை (டிசம்பர் 8) காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது. மொத்தமாக 33 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 37 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணப்படுகிறது. அதேபோல, ஹிமாச்சலப் பிரதேசத்தில் 68 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 59 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்படுகின்றன. குஜராத்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இருமுனை போட்டியாக இருந்த தேர்தல், ஆம் ஆத்மியின் வருகையால் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. இந்த ஆம் ஆத்மி டெல்லி மாநகராட்சி தேர்தலில் கண்ட வெற்றியின் சுவையை குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் ருசி பார்க்க ஆர்வம் காட்டுகிறது.
பாஜக-காங்கிரஸ்-ஆம் ஆத்மி: குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று சுட்டிக்காட்டுகின்றன. இந்த கணிப்புகள் போலவே வெற்றி பெற்றால், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் பாஜகவிற்கு வெற்றி கிட்டும் என்று அக்கட்சி நினைக்கிறது. இந்த கணக்கை பிரதமர் மோடி 3 மாதங்களுக்கு முன்பே போட்டுவிட்டார் என்றே சொல்லலாம். குஜராத் தேர்தல் பரப்புரையை 2 மாதங்களுக்கு முன்பாகவே ஆரம்பித்தார், பிரதமர் மோடி. உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்தியப் பிரசேத முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோரையும், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தினார். இப்படி ஒட்டுமொத்த பாஜக முகங்கள் தேர்தல் பணியில் குவிந்திருக்க காங்கிரஸ் மௌனம் மட்டுமே காத்துவந்தது. காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் மட்டுமே பங்கேற்றனர்.
இதனால் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மட்டுமே பரப்புரைக்குத் தலைமை தாங்கினார். அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜூன கார்கேவும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் உரையாற்றினார். இந்த பரப்புரை காங்கிரஸ் வாக்கு வங்கிகளை மட்டுமே கவர்ந்தது, நடுநிலையான வாக்காளர்களைப் பெரிதும் கவரும் வகையில் இல்லை. சொல்லப்போனால் காங்கிரஸ் வெற்றிபெறும் நோக்கில் தேர்தல் பணிகளை செய்யவில்லை. மோசமான தோல்வியைச் சந்திக்காமல் கணிசமான வெற்றியைப் பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்தியது. மறுபுறம் புதிய போட்டியாளரான ஆம் ஆத்மி தீவிர பரப்புரையை மேற்கொண்டது. பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து தன்னை மூன்றாவது பெரிய கட்சியாக நிலைநிறுத்திக் கொள்ளவும், காங்கிரஸ் இடத்தைப் பிடிக்கவும் முயற்சி செய்துவருகிறது, ஆம் ஆத்மி.
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியை விட ஒருபடி மேலே சென்று 5 மாதங்களுக்கு முன்பாகவே குஜராத்தில் தேர்தல் பரப்புரை கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தத் தொடங்கினார். குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது.
மொத்தமாக 66.31 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. ஆனால், 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 71.28 விழுக்காடாகும். இந்த வாக்குப்பதிவின் பின்னடைவு பாஜகவுக்கு எதிர்ப்பு அலை இல்லை என்பதை காட்டுவதாக பாஜக தரப்பு தெரிவிக்கிறது. கடந்த தேர்தலில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் தொகுதிகளில் வெற்றி பெற்ற 20 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு கட்சி மாறிவிட்டனர். இதனாலேயே காங்கிரஸ் கிடைக்கும் தொகுதிகளே போதும், வெற்றி பெற்றாலும் சிலர் கட்சி மாறிவிடுவர் என்று மந்தமாக தேர்தல் பணிகளை செய்தது.