அகமதாபாத் : பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் வழங்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிறைக்குச் செல்லும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம், கோலாரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டார். “நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவருக்கும் எப்படி ஒரே பெயராக இருக்க முடியும்? எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற இணை பெயரோடு இருக்க முடியும்?” என ராகுல் காந்தி பேசினார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தார். பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என சூரத் நீதிமன்றம் அறிவித்தது. மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள்காட்டி மக்களவைச் செயலகம் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் அவர் தங்கி இருந்த அரசு வீட்டைக் காலி செய்யுமாறு மக்களவைச் செயலகம் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியது. வீட்டைக் காலி செய்வதாக ஒப்புக்கொண்டு ராகுல் காந்தியும் பதில் கடிதம் எழுதினார்.