அகமதாபாத் (குஜராத்):சர்கேஜ் - காந்தி நகர் நெடுஞ்சாலையில் இஸ்கான் பாலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு வாகனம் மீது மஹிந்திரா தார் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை பொதுமக்கள் கூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே வேகமாக வந்த ஜாகுவார் சொகுசு கார் மக்கள் கூட்டத்தில் புகுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் இரண்டு போலீசார் உள்பட 9 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. நேற்று (ஜூலை 19) இரவு இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து செக்டார் 1 இணை போலீஸ் கமிஷனர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்தை வேறு வழியில் மாற்றி விட்டு சீர் செய்தனர்.
இந்த விபத்து குறித்து போக்குவரத்து காவல் உதவி ஆணையர் எஸ்.ஜே.மோடி கூறுகையில், “சர்கேஜ் - காந்தி நகர் நெடுஞ்சாலையில் இஸ்கான் பாலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம் மீது மஹிந்திரா தார் கார் மோதியது. இந்த விபத்தை காண ஏராளமான மக்கள் சாலையில் திரண்டு இருந்துள்ளனர். அப்போது கர்னாவதி கிளப்பில் இருந்து வேகமாக வந்த ஜாகுவார் சொகுசு கார் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கூட்டத்தின் மீது மோதியது” என அவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் குஜராத்தில் உள்ள பொடாட் மற்றும் சுரேந்திரநகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் படிப்பிற்காக அகமதாபாத்தில் தங்கியிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.