அகமதாபாத்:1995ஆம் ஆண்டு முதல் குஜராத் மாநில ஆட்சியை கைப்பற்றி வரும் பாஜக, தற்போதைய தேர்தலின் வாக்கு எண்ணிக்கையிலும் சாதனையை தொடர்கிறது. காலை 11 மணி நிலவரப்படி மொத்தம் 158 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் குஜராத்தில் பாஜகவுக்கு வரலாறு காணாத வெற்றி சாத்தியமாகும். 27 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக இவ்வளவு பெரிய வெற்றியை கண்டதில்லை.
182 தொகுதிகளைக் கொண்டுள்ள குஜராத்தில் பெரும்பான்மை பெற 92 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதுமானது. 2002 ம் ஆண்டு 127 தொகுதிகளில் வெற்றி பெற்றதே பாஜகவின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. இந்த தேர்தலில் அந்த சாதனை முறியடிக்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 1985ம் ஆண்டு காங்கிரஸ் பெற்ற 149 தொகுதிகள் தான், குஜராத்தில் ஒரு தனி அரசியல் கட்சி பெற்ற அதிகபட்ச தொகுதிகளின் எண்ணிக்கை. அதனையும் இந்த தேர்தலில் பாஜக முறியடிக்கும் என முன்னிலை நிலவரங்கள் காட்டுகின்றன.