டெல்லி: தலைநகர் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த நிதித்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பொதுவாக பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு, வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கூட்டத்தை தொடர்ந்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பேக்கிங் செய்யப்பட்ட சிறுதானிய தினை மாவு மீது 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், 70 சதவீதம் முழு கலவை கொண்ட சிறுதானிய தினை மாவுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் வெல்லப் பாகின் (jaggery) மீது விதிக்கப்பட்டிருந்த 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை குறைத்து 5 சதவீதமும், மனிதர்கள் அருந்தும் மதுபானங்களை தயாரிக்க பயன்படுத்தும் கூடுதல் நடுநிலை ஆல்கஹால் (Extra Neutral Alcohol) மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பங்கேற்ற நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறுதானிய தினை மீது வரி விலக்கு வேண்டும் எனவும் இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்ற போதிலும் இதன் சாகுபடி உயர்வதுடன், இந்த விவசாயத்தை நம்பி உள்ள விவசாயிகளும் பயனடைவார்கள் எனவும் தெரிவித்தார்.