பாகல்பூர்: காலம் போகின்ற வேகத்தில் வேலைப்பளு, குடும்ப பொறுப்புகள் எனப் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில், சிலர் தங்களது திருமண நாளை மறந்து போவது உண்டு. மனைவி என்னதான் சூசகமாக எடுத்துக் கூறினாலும், அவ்வளவு எளிதில் அந்த நாளை அவர்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை. அந்தளவுக்கு வாழ்க்கையில் வேகமாக ஓடிக் கொண்டிருப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
திருமண நாளை மறந்தால் பரவாயில்லை... திருமணத்தையே மறந்துவிட்டால்? ஆம். பீகாரில் இளைஞர் ஒருவர் தனது திருமணத்தையே மறந்துவிட்டு, மண விழாவுக்குச் செல்லாமல் இருந்திருக்கிறார். பீகார் மாநிலம் அந்திசாக் கிராமத்தை சேர்ந்தவர், மியான். இவருக்கும், சுல்தான்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது.
இதைத் தொடர்ந்து இரு குடும்பத்தினரும் திருமண ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. பொதுவாக திருமண நிகழ்ச்சி என்றாலே, மது விருந்து நடப்பது உண்டு. அதேபோல், மணமகன் மியான் தனது நண்பர்களுடன் திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு மதுகுடித்துள்ளார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் போதை தலைக்கேறி, என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருந்திருக்கிறார்.
செவ்வாய்க்கிழமை திருமணம் நடைபெற இருந்த நிலையில், அன்டிசாக் பகுதியில் இருந்து கல்கான் வரை, மணமக்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று, அதன்பின் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. செவ்வாயன்று காலை, மணமகள் திருமண ஊர்வலத்துக்கு தயாராக இருந்தார். மணமகன் வருகைக்காக அவர் காத்திருந்தார். ஆனால், குடிபோதையில் இருந்த மணமகன் மியான் திருமண ஊர்வலத்துக்கு செல்லாமல் தனது திருமணத்தையே மறந்திருந்தார். நீண்ட நேரமாகியும் மணமகன் வராததால், பெண் வீட்டார் சிலர் மணமகன் வீட்டுக்குச் சென்றனர். அப்போது மணமகன் மியானின் நிலையை அறிந்தனர்.
பின்னர் போதை தெளிந்த அவர், அவசர அவசரமாக திருமணத்துக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால், இதுபோன்று குடிப்பழக்கம் கொண்ட கணவர் தனக்குத் தேவையில்லை என்றும், திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும் மணமகள் தெரிவித்தார். இதனால் திருமணத்தை நிறுத்துவதாக பெண் வீட்டார் அறிவித்தனர். மணமகன் குடும்பத்தினர் சமாதானம் செய்தும் அவர்கள் ஏற்கவில்லை.
மேலும் தாங்கள் திருமணத்துக்காக செலவு செய்த தொகையினை திருப்பித் தர வேண்டும் என மணமகன் குடும்பத்தினரிடம் கேட்டனர். இதற்கு மணமகன் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காததால், அவர்களை சிறைபிடித்தனர். இதனால் திருமண வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மணமகனின் குடும்பத்தினர் பெண் வீட்டாரிடம் பணத்தை கொடுத்து, சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லி மதுக் கொள்கை முறைகேடு வழக்கு: வரும் 20ம் தேதி கவிதா ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்