ஹைதராபாத் (தெலங்கானா): பிஆர்எஸ் அரசின் அமைச்சர்கள் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு எம்எல்சி-களின் நியமன பரிந்துரையை அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நிராகரித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்எல்சி நியமன ஒதுக்கீட்டில் தசோஜு ஷ்ரவன் மற்றும் குர்ரா சத்தியநாராயணா ஆகியோரின் வேட்புமனுவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த பரிந்துரைகளை தமிழிசை சவுந்தரராஜன் நிராகரித்தார்.
மேலும், பரிந்துரைக்கப்பட்ட இருவரும் துறை சம்பந்தமாக எந்த சேவையும் செய்திருக்கவில்லை என்றும், இந்த ஒதுக்கீட்டின் கீழ் அவர்களை நியமிக்க முடியாது என்றும் நிராகரிப்பிற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தசோஜு ஷ்ரவன் மற்றும் குர்ரா சத்தியநாராயணா இருவருக்கும் இலக்கியம், அறிவியல் தொழில்நுட்பம், கலை, சமூக சேவை என எந்த ஒரு சிறப்பும் இல்லை என்று தமிழிசை தெரிவித்தார்.
இதனால், பிரிவு 171(5) கீழ் அவர்களுக்கு போதிய தகுதிகள் இல்லை. உரிய தகுதியின்றி நியமனம் செய்வது ஏற்புடையதல்ல. மாநிலத்தில் தகுதியான பல பிரபலங்கள் உள்ளனர். தகுதியைக் கருத்தில் கொள்ளாமல் அரசியல் தொடர்புடையவர்களின் பெயர்களை பரிந்துரைப்பது ஏற்புடையதல்ல என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் யாரையும் எம்எல்சிகளாக நியமிக்கக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார். தற்போது சிபாரிசு செய்துள்ள தசோஜு ஷ்ரவன் மற்றும் குர்ரா சத்தியநாராயணா தகுதி நீக்கத்தின் கீழ் வரவில்லை என்று கூறுவதற்கு உளவுத்துறை உட்பட வேறு எந்த அமைப்பிடமிருந்தும் எந்த அறிக்கையும் இல்லை என்று அவர் கூறினார்.