டெல்லி:நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதல், மணிப்பூர் இனக்கலவரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஒரு புறம் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டாலும், மறுபுறம் மத்திய அரசு இந்த கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று(ஜூலை 26), சத்தீஸ்கரில் உள்ள தனுஹர், தனுவர், கிசான், சான்ரா, சவோன்ரா, பிஞ்சியா ஆகிய சமூகங்களை எஸ்டி (ST) பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமலேயே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் சத்தீஸ்கரில் உள்ள 72,000 பேர் பயனடைவார்கள் என மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இன்றும்(ஜூலை 26) மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக பிரதமர் மோடியை பேச வைக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தனர். இதனை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.
இதனிடையே இன்று மக்களவையில், 'வனப்பாதுகாப்பு திருத்த மசோதா 2023' நிறைவேற்றப்பட்டது. வனம் என்ற வரையறையின் கீழ் உள்ள நிலப்பகுதிகளை வனம் சாரா பிற நோக்கங்களுக்கு பயன்படுத்த இந்த மசோதா வழி செய்கிறது. இந்த மசோதாவுக்கு ஏற்கனவே சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.