டெல்லி :“விவசாயி சமரசம் செய்துகொள்ள மாட்டார், அவ்வாறு சமரசம் செய்தால் நாட்டில் எதிர்காலம் இருக்காது” என்று வேதனை தெரிவித்த ராகுல் காந்தி, “நீங்கள் கவலைப்பட வேண்டாம், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை புதன்கிழமை சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நீங்கள்தான் (விவசாயிகள்) இந்தியா, உங்களை யாரும் பின்னுக்கு தள்ள முடியாது. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று தெரிவித்தார். மேலும் அவர், “நாட்டில் உள்ள விவசாயிகளை வேளாண் மசோதா அவமதிக்கிறது. இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி வேளாண் சட்டம் விவசாயிகளை ஆதரிக்கிறது என்று கூறுகிறார். இந்த மசோதா விவசாயிகளின் நலன்களுக்காக இருந்தால், விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்?
அவர்கள் ஏன் கோபப்படுகிறார்கள். சட்டங்கள் நாட்டின் விவசாய முறையை பிரதமரின் நண்பர்களிடம் (பெருநிறுவனங்கள்) ஒப்படைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. விவசாயி அதைப் புரிந்து கொண்டார்.
விவசாயிகள் சக்தியை யாராலும் எதிர்கொள்ள முடியாது. அரசாங்கம் ஒரு மாயையின் கீழ் இருக்கக்கூடாது. மேலும், விவசாயிகள் பின்வாங்குவார்கள், பயப்படுவார்கள் என்றும் அரசாங்கம் நினைக்கக்கூடாது.
நாட்டின் விவசாயி பயப்பட மாட்டார், சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டக்களத்தில் இருந்து நகரவும் மாட்டார். எந்தவொரு விவாதமும் இல்லாமல், எதிர்க்கட்சிகளுடன் விவாதமும் இல்லாமல், இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விதம், நாட்டின் விவசாயிகளுக்கு ஒரு அவமானமாக நாங்கள் கருதுகிறோம். விவசாயி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார். அரசாங்கம் அவர்களின் நலனுக்காக செயல்படுகிறது என்று விவசாயிகள் நம்பவில்லை.
லட்சோப லட்சம் விவசாயிகள் தெருக்களில் இறங்கி போராடுகின்றனர். அவர்கள் வன்முறை போராட்டத்தை நடத்தவில்லை. ஜனநாயக ரீதியாக தெருக்களில் இறங்கி போராடுகின்றனர். வாட்டி வதைக்கும் குளிரிலும் ஜனநாயகத்தை அவர்கள் கைவிடவில்லை. ஆகவே இந்த மசோதாவை திரும்ப பெறுவது அவசியம்” என்று குடியரசுத் தலைவரிடம் நாங்கள் தெரிவித்தோம் என்றார்.
அப்போது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா மற்றும் திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இதையும் படிங்க : வேளாண் சட்டத்தை திரும்பப் பெற குடியரசு தலைவர்களிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் நேரில் கோரிக்கை