தமிழ்நாடு

tamil nadu

"தமிழ்நாடு வழிநடத்தியது பெருமை" சந்திரயான் - 3 வெற்றி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.. இஸ்ரோவுக்கு தலைவர்கள் வாழ்த்து!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 10:11 PM IST

MK stalin wishes to ISRO Team:சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறக்க பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி,முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து!
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி,முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து!

சென்னை:சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் திட்டமிட்டப்படி மாலை 6.04 மணிக்கு தரையிறங்கியது. இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து நிலவில் இந்தியா கால் பதித்தது. நிலவில் இந்தியா கால் பதித்திருப்பதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகமாக கொண்டாடினர். இதையடுத்து சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றிருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தொடர்ந்து 10 கட்டங்களாக நிகழ்த்தப்பட்ட இந்த திட்டம், கடைசி திக் திக் நிமிடங்களைக் கடந்து நிலவின் தரைப்பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கபட்டு, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.இந்த வெற்றியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமல்ல நாட்டு மக்களே கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி:நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 வரலாற்று பூர்வ பயணத்தை வெற்றிகரமாக்கிய நமது விஞ்ஞானிகளால் ஒட்டுமொத்த தேசமும் வெளிநாடுவாழ் இந்திய சமூகமும் பெருமிதம் கொள்கின்றன. தலைசிறந்த விண்வெளி நாடுகளின் போட்டிக்குள் இந்தியாவை சேர்த்த இஸ்ரோ குழுவுக்கு வாழ்த்துக்கள். இதுதான் தடுக்க முடியாத இந்தியா என பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின்:நிலவில் இந்தியா! சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு எனது பாராட்டுகள். நிலவில் கால்தடம் பதித்த 4 ஆம் நாடாக இந்தியாவை நிலைநிறுத்தியுள்ள வரலாற்றுச் சாதனை இது. இதற்காக அயராது பாடுபட்ட ஒட்டுமொத்த அணியினருக்கும் எனது பாராட்டுகள். இந்திய விண்வெளி ஆய்வில் இது ஒரு பெரும் பாய்ச்சல்.

சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது தமிழகத்திற்கு சாதனை உணர்வைக் கொண்டுவருகிறது. மயில்சாமி அண்ணாதுரை, எம் வனிதா மற்றும் இப்போது பி வீரமுத்துவேல் ஆகிய மூவரும் சந்திராயன் பயணங்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விதிவிலக்கான சிந்தனையாளர்களால் வழிநடத்தப்பட்டுள்ளன. அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவம் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது என தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:நிலவின் தென் துருவத்தில் கால்பதித்தது பெருமையாக உள்ளது. லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். குறிப்பாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத், திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேல், சந்திராயன் இயக்கத்தின் முன்னோடியான முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3, இந்திய விண்வெளி வரலாற்றில் இந்நாள் பொன்னாள் - மகிழ்ச்சி!!! ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து ஜூலை 14-ஆம் நாள் வெண்வெளிக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் பல்வேறு கட்ட பயணங்களுக்குப் பிறகு இன்று மாலை நிலவில் தரையிறக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்துள்ள முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த நாள் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் பொன் நாள். இந்த வரலாற்று சாதனையை படைத்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் உள்ளிட்ட விஞ்ஞானிகள் அனைவருக்கும் பாராட்டுகள். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகள்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை:"இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில், நமது பிரதமர் அவர்களின் திறமையான தலைமையின் கீழ் இந்தியா ஒரு அசைக்க முடியாத விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது. இஸ்ரோ குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.சந்திரனின் தென் துருவத்தைத் அடைந்த முதல் நாடாக இந்தியா உள்ளது.”சந்தர்ப்பங்கள் நமக்கு எதிராக இருக்கும் போது, அதை துல்லியமாக வழங்க எங்கள் இந்தியாவை நம்புங்கள்” என தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் :நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி LVM ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்க இரவு பகல் பாராமல், அர்ப்பணிப்புடன் அயராது உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்திரயான்- 3 விண்கலத்தின் திட்ட இயக்குனராக தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேல் பணியாற்றியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. உலக நாடுகள் பல முயற்சி செய்தும் நெருங்க முடியாத நிலவின் தென் துருவத்தை சந்திரயான்-3 அடைந்திருக்கும் இந்த நாள் இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும் என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க :India is on the moon: "இந்தியா நிலவின் மீது உள்ளது" - இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெருமிதம்!

ABOUT THE AUTHOR

...view details