டெல்லி: இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் கடந்த சில மாதங்களாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூகுள் நிறுவனமும் இந்தியாவின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கைகோர்த்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் கலை மற்றும் கலாச்சார பிரிவினர், இந்தியாவின் 75 ஆண்டுகால வளர்ச்சி, சாதனைகள், சாதனையாளர்கள் உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கும் இரண்டு நிமிட வீடியோ தொகுப்பை உருவாக்கியுள்ளனர்.
'இந்தியா கி உதான்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் பல அரிய புகைப்படங்களும், தகவல்களும் உள்ளன. இந்த வீடியோ தொகுப்பு, நேற்று(ஆகஸ்ட் 5) டெல்லியில் உள்ள சுந்தர் நர்சயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இதில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி மற்றும் கூகுள் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், 2022ஆம் ஆண்டிற்கான டூடுல்4கூகுள் போட்டி, "அடுத்த 25 ஆண்டுகளில், எனது இந்தியா" என்ற தலைப்பில் நடத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும், வெற்றி பெற்ற மாணவரின் படைப்பு நவம்பர் 14ஆம் தேதி கூகுள் டூடுலில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.