கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நேற்று நடந்து முடிந்த நிலையில், இடது ஜனநாயக முன்னணி வரலாற்று வெற்றியைப் பெரும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலானஇடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என கேரளாவில் இம்முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் கட்சி ஆட்சியைத் தக்கவைக்காத நிலையே அங்கு தொடர்கிறது. அந்த வகையில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வரலாற்றைப் படைக்கும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில் நேற்று (ஏப்ரல்.06) தனது சொந்த ஊரான கண்ணூர் மாவட்டம், பினராயி பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் வாக்கு செலுத்திவிட்டு பினராயி விஜயன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இது எல்.டி.எஃப்க்கு வரலாற்று வெற்றியாக இருக்கும். உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகள் கேரள மக்களால் நிராகரிக்கப்பட்டது போல் இம்முறையும் நடக்கும். தேர்தல் பிரச்சாரத்தில் அதற்கான அறிகுறிகளை நாங்கள் கண்டோம். 2016ஆம் ஆண்டு முதல் மக்கள் நலன் சார்ந்த மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதும், பேரழிவுகளை எதிர்கொண்டபோதும் மக்கள் எங்களுடன் நின்றனர். எங்களுடன் எல்லா நேரத்திலும் துணை நின்றவர்களே இந்தத் தீர்ப்பை வழங்குகிறார்கள்" என்றார்.
இதையும் படிங்க:கேரளா தேர்தல் ஒரு பார்வை