கொண்டகான் :சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகன் கீர்வாகி பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பள்ளியில் உள்ள கழிவறையை மாணவிகள் தூய்மையாக வைத்துக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக 25 பள்ளி மாணவிகளை பிடித்த ஆசிரியைகள் தங்களுக்குள்ளேயே ஒருவர் மீது ஒருவர் சூடான எண்ணெயை ஊற்றுமாறு கூறி தண்டனை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மாணவிகளின் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து விசாரணை நடத்தினர்.
அதேநேரம், பள்ளியில் உள்ள கழிவறை தூய்மையாக இல்லை எனக் கூறி மாணவிகளே தங்களுக்குள் தண்டனை வழங்கிக் கொண்டதாக தலைமை ஆசிரியர் போலீசார் மற்றும் கல்வி அலுவலர்களிடம் தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் பூதாகரம் அடைந்த நிலையில் மாணவிகளுக்கு தண்டனை வழங்கியதாக கூறப்படும் ஜோஹரி மர்காம், பூனம் தாகூர், மிதாலி வர்மா ஆகிய ஆசிரியைகளை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
மேலும், பள்ளியில் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பெண் ஊழியரும் இந்த சம்பவம் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் குறித்து குழு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கல்வி அலுவலர்கள் மற்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :முதல் முறையாக சூரியனின் முழு வட்ட படத்தை படம் பிடித்து இஸ்ரோ சாதனை!