கொல்லம் : கேரளாவில் டியூசன் சென்ற போது கடத்தப்பட்ட 6 வயது சிறுமி 21 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டு உள்ளார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பூயப்பள்ளியை சேர்ந்த 6 வயது சிறுமி தனது சகோதரருடன் கடந்த திங்கட்கிழமை மாலை டியூசன் சென்று உள்ளார். அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த கும்பல் சிறுவனை தள்ளிவிட்டு சிறுமியை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறுவன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெண் உள்பட நான்கு பேர் காரில் வந்து சிறுமி கடத்த வந்ததாகவும் அதை தடுக்க முயன்ற சிறுவனை தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சிறுவனுக்கு கால் பகுதியில் லேசான காயங்கள் ஏற்பட்டன.
சிறுவன் அளித்த அடையாளத்தின் அடிப்படையில் ஒருவரின் ஓவியத்தை வரைந்த போலீசார், அதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். மறுபுறம் 6 வயது சிறுமியை கடத்தியவர்களிடம் இருந்து பெற்றோருக்கு இரண்டு முறை தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கபப்ட்டது. முதல் முறை வந்த அழைப்பில் சிறுமி நலமுடன் இருப்பதாகவும் செவ்வாய்க்கிழமை விட்டுவிடுவதாகவும் அதற்கு 5 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து மீண்டும் அந்த மர்ம நபர்கள் சிறுமியின் பெற்றோரை அழைத்து 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கு கூடுதல் தலைவலி ஏற்பட்டது. அதேநேரம் போலீசாரின் விசாரணை மந்தமாக இருப்பதாக கூறி இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் காவல் நிலையம் முன் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 21 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொல்லம் பகுதியில் உள்ள அசிரமம் மைதானத்தில் சிறுமி விடப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 6 வயது சிறுமியை பத்திரமாக மீட்டனர்.
ஏறத்தாழ 21 மணிநேரம் போராட்டத்திற்கு பின்னர் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் கேரளா போலீசார் தெரிவித்து உள்ளனர். காணாமல் போன சிறுமி 21 மணி நேரத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க :கேரளாவில் 6 வயது சிறுமி கடத்தல்.. கடத்தல் நபரின் ஓவியம் வெளியீடு!