டெல்லி:ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தியாவில், தலைநகர் டெல்லியில் நாளை (செப்.9) நாளை மறுநாள் (செப். 10) தேதிகளில் நடைபெற உள்ளது. முதன்முறையாக ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை வகிக்கும் நிலையில், இந்தியாவின் பல்வேறு தலைநகரங்களில் நடைபெற்ற ஜி20 மாநாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் ஜி20 மாநாட்டின் உச்சி மாநாடு (G20 Summit) தலைநகர் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் (செப்.9, 10) நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள், பிரதிநிகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் ரஷ்யா, சீனா அதிபர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. உலகின் வல்லரசு நாடுகளான சீனா, ரஷ்யா ஜி20 மாநாட்டில் பங்கேற்காதது பல தரப்புகளில் இருந்தும் பல்வேறு கருத்துகள் வெளியாவதற்கு வழிவகுத்தது. மேலும் ஜி20 மாநாட்டிற்குன் இந்தியா தலைமை தாங்குவதால் தான் சீன அதிபர் பங்கேற்கவில்லை எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜி20 உச்சி மாநாட்டில் ரஷ்யா, சீனா அதிபர்கள் பங்கேற்காதது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன் (German Ambassador Philipp Ackermann) தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் மற்றும் ரஷ்ய அதிபர் இல்லாததால் எந்த மாற்றமும் ஏற்படாது. ரஷ்ய அதிபர் புதின் (Putin), கடைசி உச்சி மாநாட்டிலும் கலந்து கொள்ளவில்லை, அது எதிர்பார்த்ததுதான். ஆனால் சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) கலந்து கொள்ளாதது எங்களுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.
ஆனால் நான் ஒன்றைத் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன், சீன அதிபர் பங்கேற்காத நிலையில் சீன பிரதமர் ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார். இதனால் சீன அதிபர் இல்லாத தாக்கத்தை இது பெரிய அளவில் ஏற்படுத்தாது. சீனப் பிரதமர், சீனாவின் ஒரு நல்ல பிரதிநிதி. மாநாட்டில் அவர் தனது குரலை ஒலிக்கச் செய்வார்.