டெல்லி: இந்திய ராணுவப் படையின் 29ஆவது தலைமைத் தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே இன்று (ஏப்.30) பொறுப்பேற்றார். ஜெனரல் எம்.எம் நரவனே பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே பொறுப்பேற்றார். ராணுவத்தில் பொறியாளர் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
தேசிய பாதுகாப்பு அகாடமியில் தனது பயிற்சியை முடித்த மனோஜ் பாண்டே, 1982ஆம் ஆண்டு ராணுவத்தில் பொறியாளர் பிரிவில் நியமிக்கப்பட்டார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் பராக்ரம் ஆப்ரேஷன் செயல்படுத்தப்பட்ட போது அதில் பணியாற்றியவர்.
அந்தமான்-நிகோபார் பிரந்தியம், லடாக் உள்ளிட்ட இடங்களில் முக்கியமான பதவி வகித்துள்ளார். பிப்ரவரி 1ஆம் தேதி ராணுவ துணைத்தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்றார். ராணுவத்தில் நீண்ட அனுபவம் கொண்டவர். பல்வேறு முக்கிய பதவிகளை மனோஜ் பாண்டே வகித்துள்ளார்.
இந்நிலையில், இன்று ஜெனரல் மனோஜ் பாண்டே புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார். மேலும், முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்து ஜெனரல் பிபின் ராவத் கடந்த டிசம்பரில் தமிழ்நாட்டின் குன்னூர் பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணடைந்தார். இதையடுத்து, அடுத்த முப்படை தலைமை தளபதியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பரபரக்கும் டெல்லி; மம்தா-கெஜ்ரிவால் சந்திப்பு!