மதுரா (உத்தரப்பிரதேசம்):உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொடூரச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு பெண்ணை வன்கொடுமை செய்த கும்பல் ஒன்று அப்பெண்ணின் காலில் பைக்கினை ஏற்றி சித்ரவதை செய்துள்ளனர். மேலும் அப்பெண்ணை காட்டில் தூக்கி எறிந்து விட்டுச்சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினர் அளித்த தகவலில், ‘சென்ற மே 24ஆம் தேதி, மதுரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு 30 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டிற்குச்சென்று கொண்டிருந்தார். அப்போது டெம்போ ஸ்டாண்டில் வாகனத்திற்காக அப்பெண் காத்திருந்தார். அந்நேரத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞன், அப்பெண்ணை வீட்டில் விட்டு விடுவதாகக் கூறி, அவரது பைக்கில் ஏற்றி சென்றார். வழியில், அவனின் கூட்டாளியான மூன்று பேர் அந்தப் பெண்ணை போதை பானத்தை குடிக்க வைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தனர்.
அதன்பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் காலில் பைக்கால் ஏற்றி கொடுமை செய்தனர். காயமடைந்த பெண்ணை கோபால் பாக் கால்வாய் புதர்களில் வீசியுள்ளனர். இதனையடுத்து சுயநினைவு திரும்பிய பிறகு, பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டிற்கு வந்து, கோசிகலா சமூக சுகாதார மையத்தில் சிகிச்சைப் பெற்றார். மேல் சிகிச்சைக்காக ஹரியானாவுக்கு அனுப்பப்பட்டார். சிகிச்சையின்போது அதிக பாதிப்பால் அப்பெண்ணின் ஒரு கால் துண்டிக்கப்பட்டது.